நிலக்கோட்டை, டிச. 18: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கல்லூத்து பெருமாள்பட்டியை சேர்ந்த ஜெயபாண்டி மனைவி சந்தியா (29). இவர் நேற்று தனது டூவீலரில் நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டிக்கு வந்து ஆடைகள் வாங்கி விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் அருகே வந்த போது பின்னால் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் திடீரென சந்தியாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச்செயினை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.
இதை சற்றும் எதிர்பாராத சந்தியா டூவீலரிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து கதறினார். இதை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் சந்தியா இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிந்து மர்மநபரை தேடி வருகிறார்.
The post நிலக்கோட்டை அருகே பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு appeared first on Dinakaran.