அருப்புக்கோட்டை, டிச.21:அருப்புக்கோட்டை அருகே நான்குவழிச் சாலையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி, மதுரை தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் அமைந்துள்ளது. ராமசாமிபுரம் சாலையில் இருந்து திருச்சுழி சாலைக்கு செல்ல, கஞ்சநாயக்கன்பட்டி கிராமம் வழியாக உள்ள சாலையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் மற்றும் பிற தேவைகளுக்காக பொதுமக்கள் அன்றாடம் இந்த நான்கு வழிச்சாலையை கடந்து செல்லவேண்டியுள்ளது. இந்நிலையில் இந்த நான்குவழிச் சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் சாலையை கடக்க பாலம் அமைத்து தரக் கோரி இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுவரை சாலையை கடக்கும் போது 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 65 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் சாலையை கடக்க நீண்ட நேரம் காத்திருந்து கடக்கும் சூழல் இருப்பதோடு நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது. ஆகையால் கிராம பொதுமக்களின் நலன்கருதி கஞ்சநாயக்கன்பட்டி விலக்குசாலையில் புதிய மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அருப்புக்கோட்டை அருகே விபத்துகளைத் தடுக்க புதிய மேம்பாலம்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.