செங்கோட்டை: ஐயப்பரின் படை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோயிலில் மகோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தமிழகத்தில் முருகருக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல் கேரளாவில் ஐயப்ப சுவாமிக்கு பந்தளம், குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில், எரிமேலி, சபரிமலை ஆகிய 6 படை வீடுகள் உள்ளன. இதில் ஆரியங்காவு, அச்சன்ேகாவில் ஆகியவை தமிழக எல்லையோரம் அமைந்துள்ளன. அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோயிலில் ஆண்டுதோறும் மகோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
8 மணிக்கு சென்னையை சேர்ந்த சைலஜா கோபாலகிருஷ்ணன் குழுவினரின் நாராயணா பாராயணம் பஜனை நடந்தது. பின்னர் ஐயப்ப சுவாமிக்கு தீபாராதனையுடன் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் சபரிமலை தந்திரிகளில் ஒருவரான செங்கனூர் தாழமன் மடம் கண்டரரு மோகனரு கொடியேற்றி வைத்தார். அப்போது கருட சேவை காட்சியளித்தது. மாலையில் ஆசி சொற்பொழிவும், மந்திர தியானமும், 7.30 மணிக்கு வயலின் இசை கச்சேரியும், இரவு 8.30 மணிக்கு பூதபலி எழுந்தருளல் நடந்தது. இதில் தமிழகம், கேரளாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரிமலையிலும், அச்சன் கோயிலில் மட்டுமே ஆகும். விழாவை முன்னிட்டு, 17, 18, 19 ஆகிய தேதிகளில் உற்சவ வாரி திருவிழாவும், 20ம் தேதி அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெறும். 5, 6, 7ம் நாட்கள் திருவிழாவில் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சியும், 24ம் தேதி 9ம் திருநாளில் சுமார் 50 அடி நீளம் கொண்ட மூங்கிலை கட்டி நடைபெறும் தேரோட்ட திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. தொடர்ந்து 25ம் தேதி ஆராட்டு விழா நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
The post ஐயப்பரின் படை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவிலில் மஹோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.