மவுண்ட்பேட்டன் மனைவிக்கு எழுதிய நேருவின் கடிதங்களை சோனியா தர வேண்டும்: பாஜ வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது ஒன்றிய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பாஜ செய்தித்தொடர்பாளரான சம்பித் பத்ரா, நேருவின் கடிதங்கள் தொடர்பான துணைக் கேள்வியை எழுப்பினார். ஆனால், முக்கிய கேள்விக்கு தொடர்பில்லாத கேள்வி என்பதால் பதிலளிக்க மறுத்த அமைச்சர் செகாவத், இவ்விவகாரத்தை கவனத்தில் கொள்வதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து சம்பித் பத்ரா அளித்த பேட்டி :

ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, நேரு அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது. அதற்கு முன்பாக கடந்த 2010ல் அருங்காட்சியகம் டிஜிட்டல் மயமாக்கப்பட இருந்த நிலையில், 2008ம் ஆண்டு நேருவின் முக்கியமான கடிதங்களை சோனியா காந்தி குடும்பத்தினர் திரும்ப பெற்றனர். அருங்காட்சியக இயக்குநரின் ஒப்புதலுக்குப் பிறகு 51 அட்டைபெட்டிகளில் நேருவின் ஆவணங்கள் சோனிய காந்தியிடம் வழங்கப்பட்டது.

அதில், இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராயின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன், சோசலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் தலித் தலைவர் ஜெகஜீவன் ராம் போன்றவர்களுக்கு நேரு எழுதிய கடிதங்கள் உள்ளன. இந்த ஆவணங்களை மீட்டெடுக்க உதவுமாறு பிரதமர்களின் அருங்காட்சியகத்தை நடத்தும் 29 பேர் குழுவில் ஒருவரான ரிஸ்வான் கத்ரி சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு கடிதம் எழுதினார். ஆனால் எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

மவுண்ட்பேட்டன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் நேரு என்ன கூறியிருக்கிறார்? அதை வெளியிடவிடாமல் ஏன் காந்தி குடும்பம் மறைக்கிறது? நேரு, இந்தியாவின் முதல் பிரதமர். அவரது ஆவணங்கள் யாருடைய தனிப்பட்ட சொத்து அல்ல.  அவை நாட்டின் பொக்கிஷங்களில் ஒன்று. எனவே அவற்றை சோனியா காந்தி அருங்காட்சியகத்திற்கு திருப்பி தர வேண்டும் என்றார்.

The post மவுண்ட்பேட்டன் மனைவிக்கு எழுதிய நேருவின் கடிதங்களை சோனியா தர வேண்டும்: பாஜ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: