ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே புதிய கப்பல் சேவை தொடங்கப்படும்; மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை: பிரதமர் மோடி, இலங்கை அதிபர் திசநாயக பேச்சுவார்த்தையில் முடிவு

புதுடெல்லி: ‘தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை மேற்கொள்ளப்படும். ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே புதிய கப்பல் சேவை தொடங்கப்படும்’ என பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட அனுரகுமார திசநாயக தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய அமைச்சர்கள் ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகியோர் இலங்கை அதிபரை சந்தித்து பேசினர். இந்நிலையில், பயணத்தின் 2ம் நாளான நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, அதிபர் திசநாயக இடையேயான இரு தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், தமிழக மீனவர்கள், இலங்கை தமிழர்கள், இருதரப்பு பாதுகாப்பு, முதலீடு, வர்த்தக ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். பின்னர், ரயில்வே, துறைமுகம் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் திசநாயகவும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இலங்கை அதிபர் திசநாயகவை இந்தியாவிற்கு வரவேற்கிறேன். அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் அரசுமுறைப் பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. இப்பயணம் மூலம் நமது உறவில் புதிய வேகமும் ஆற்றலும் உருவாகும். எங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்த பல தொலைநோக்கு திட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளோம். இருதரப்பு பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தக உறவுகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம்.

இதில் டிஜிட்டல், எரிசக்தி இணைப்பு ஆகியவை முக்கிய தூண்களாக இருக்கும். இரு நாடுகளுக்கு இடையே மின் தொகுப்பு இணைப்பு மற்றும் பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்வதற்கான பைப்லைன் அமைத்தல் போன்ற பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்தியா திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்கும். அடுத்த ஆண்டு முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களில் 200 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகள் இலங்கையின் 1500 சிவில் சேவை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்படும். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய முடிவெடுத்துள்ளோம்.

சென்னை யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவை, கப்பல் சேவை ஆகியவை சுற்றுலாவை பலப்படுத்தி நமது கலாச்சார உறவுகளை வலுப்படுத்தியுள்ளன. தற்போது நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை படகு சேவைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டதை அடுத்து, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் சேவை தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்த விஷயத்தில், மனிதாபிமான அணுகுமுறையை மேற்கொள்ள ஒப்புக் கொண்டோம். அதே போல, இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்துவதற்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்.

அவர்களுக்கான மறுகட்டமைப்புகள் மற்றும் மீள்குடியேற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தினோம். இந்தியா இதுவரை இலங்கைக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் மற்றும் மானிய உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இந்தியாவின் உதவியுடன் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், இலங்கை அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கான முயற்சியில் இந்தியா எப்போது நம்பகமான அண்டை நாடாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளேன்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

The post ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே புதிய கப்பல் சேவை தொடங்கப்படும்; மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை: பிரதமர் மோடி, இலங்கை அதிபர் திசநாயக பேச்சுவார்த்தையில் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: