நாடாளுமன்றத்திற்கு ‘பாலஸ்தீனம்’ என எழுதப்பட்ட கைப்பையுடன் வந்த பிரியங்கா: பாஜ தலைவர்கள் கடும் கண்டனம்

புதுடெல்லி: வயநாடு மக்களவை தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்திற்கு நேற்று கொண்டு வந்த கைப்பை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கைப்பையில் ‘பாலஸ்தீனம்’ என எழுதப்பட்டும், அந்நாட்டின் இறையாண்மையை குறிக்கும் தர்பூசணி பழ சின்னமும் இடம் பெற்றிருந்தது. ஏற்கனவே, பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகுவை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இத்தகையை கைப்பையுடன் அவர் வந்தார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது. பாஜ கட்சியினர் பலரும் பிரியங்கா காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது குறித்து பிரியங்கா எதுவும் பேசவில்லையே என கேள்வி எழுப்பினர். இது முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் செயல் என பாஜ கட்சியினர் பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுத்த பிரியங்கா காந்தி, ‘‘ஒரு பெண் எதை அணிய வேண்டும், எதை அணியக் கூடாது என கூறுவது ஒருவிதமான ஆணாதிக்கம். இதை நான் ஆதரிக்கவில்லை. எனக்கு எது பிடிக்குமோ அதையே நான் அணிவேன்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களான இந்துக்கள், கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகின்றனர். அதைப் பற்றி வங்கதேச அரசிடம் ஒன்றிய அரசு பேசி, அத்தாக்குதல்களுக்கு முடிவு கட்ட ஏதாவது செய்ய வேண்டுமென அவர்களிடம் சொல்லுங்கள்’’ என்றார். இதற்கு பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, ‘‘ராகுலை விட பிரியங்கா காந்தி மிகப்பெரிய பேரழிவு சக்தி. விரைவிலேயே காங்கிரசின் கதையை அவர் முடித்து விடுவார். மத வெறியுடன் செயல்பட்டு முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். காங்கிரஸ் புதிய முஸ்லிம் லீக்’’ என கூறி உள்ளார்.

* வங்கதேச இந்துக்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்
மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ‘‘வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களான இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தை இந்தியா எழுப்ப வேண்டும். இதுதொடர்பாக வங்கதேச அரசுடன் பேசி, வலியுடன் இருப்பவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்றார். இதே கருத்தை பல எம்பிக்களும் வலியுறுத்தினர்.

The post நாடாளுமன்றத்திற்கு ‘பாலஸ்தீனம்’ என எழுதப்பட்ட கைப்பையுடன் வந்த பிரியங்கா: பாஜ தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: