வருகிற 25ம் தேதி முதல் வாஜ்பாய் நூற்றாண்டு விழா: பாஜ தகவல்

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று மையக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் பாஜ மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம், துணை தலைவர்கள் சக்ரவர்த்தி, வி.பி.துரைசாமி, கருநாகராஜன் உள்ளிட்ட மையக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், பாஜ கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள், தேர்தலுக்கு முன்பு அண்ணாமலையின் நடைப்பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: நாடு முழுவதும் கட்சியின் அடிமட்ட தேர்தல் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், தமிழகத்தில் அனைத்து பூத் அளவிலும், தேர்தல் நடைபெறுவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. வரும் 2025ம் ஆண்டு தமிழக பாஜவுக்கு மாபெரும் எழுச்சி தரக்கூடிய ஆண்டாக அமையும். அதனைத்தொடர்ந்து 2026 தேர்தலிலும் பாஜ பெரிய முத்திரை பதிக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. வரும் 25ம் தேதி முதல் வாஜ்பாய் நூற்றாண்டு விழா ஆரம்பிக்கிறது.

வாஜ்பாய் நூற்றாண்டு விழா என்பது புதிய இந்தியாவின் எழுச்சிக்கு வித்திட்ட ஆண்டாகவும், நல்லாட்சி தினமாகவும் கொண்டாடப்படும். இதற்காக, அகில இந்திய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜ சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏழை குழந்தையின் படிப்பு மற்றும் திருமணத்துக்கு பயன்படும் வகையில், ₹25 ஆயிரம் வைப்பு நிதி வழங்க இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல், அக்குழந்தை பிளஸ் 2 படிக்கும் வரை படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய திட்டமிட்டுள்ளோம். பாஜ மாநில தேர்தலில் ஒத்தக் கருத்துடன் அனைவரும் ஒருநபரை தேர்தெடுப்பதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post வருகிற 25ம் தேதி முதல் வாஜ்பாய் நூற்றாண்டு விழா: பாஜ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: