கொச்சி விமானநிலையத்தில் பாங்காக்கில் இருந்து கடத்திய ₹4.25 கோடி கலப்பின கஞ்சா பறிமுதல் மலப்புரத்தை சேர்ந்த வாலிபர் கைது

திருவனந்தபுரம், டிச. 17: கொச்சி விமானநிலையத்தில் பாங்காக்கில் இருந்து வந்த மலப்புரத்தை சேர்ந்த வாலிபரிடமிருந்து ₹4.25 கோடி மதிப்புள்ள கலப்பின கஞ்சா கைப்பற்றப்பட்டது. கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமானநிலையம் வழியாக தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான பயணிகள் இங்கு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பாங்காக்கில் இருந்து ஒரு விமானம் கொச்சிக்கு வந்தது.

இதில் வந்த பயணிகளிடம் விமானநிலைய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டனர். ஒரு வாலிபரிடம் நடத்திய சோதனையில் அவரது பேக்கில் ஒரு பிளாஸ்டிக் பையில் மறைத்து வைத்திருந்த 14 கிலோ கலப்பின கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ₹4.25 கோடியாகும். விசாரணையில் அவரது பெயர் ஆமில் ஆசாத் (28) என்றும், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இடைத்தரகரான இவருக்கு ஒரு முறை கஞ்சா கடத்துவதற்கு ₹1 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் பங்காக்கில் இருந்து கொச்சிக்கு கடத்தப்பட்ட பெருமளவு கலப்பின கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கொச்சி விமானநிலையத்தில் பாங்காக்கில் இருந்து கடத்திய ₹4.25 கோடி கலப்பின கஞ்சா பறிமுதல் மலப்புரத்தை சேர்ந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: