திருச்சி, டிச.16: திருச்சியில் கொட்டிய தொடர் மழையால், தாழ்வான பகுதிகளில் சேர்ந்த கட்டுக்கடங்காத மழை வெள்ள நீரை இறைக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் நாள் முழுவதும் ஈடுபட்டு திணறினர். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மாநிலம் முழுவதும் 27 மாவட்டங்களிலும் கனமழை கடந்த நான்கு நாட்களாக கொட்டியது. திருச்சி மாவட்டத்தில் கடந்த டிச.11ம் தேதி இரவு துவங்கிய மழை, (டிச.13) வரை பெய்து, ஒரு வழியாக அன்றைய தினம் இரவுடன் விடைபெற்றது. ஆனால் இதற்குள்ளாக மாநகரத்தின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக திரண்டது. மாநகர பகுதிகளில் பெய்த மழைநீர் மட்டுமல்லாது, புறநகர் பகுதிகள், ஊரகப்பகுதிகளில் பெய்த மழையால் நிரம்பிய ஆறுகள், பாசன வாய்க்கால்கள், குளம், குட்டை, ஏறிகள் ஆகியவற்றில் இருந்து நிரம்பி வழிந்த நீர் முழுவதும் திருச்சி மாநகரப்பகுதிகளின் சிறு, சிறு மழைநீர் வடிகால்களுக்கு வந்து சேர்ந்தது. இந்த மழைநீர் மாநகரின் தாழ்வான பகுதிகளை ஆக்கிரமித்தது.
தொடர்ந்த கனமழையே இவ்வளவு நெருக்கடிக்கும் காரணம். கனமழைால் மாநகர மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். தண்ணீரை வடிய செய்ய வலியுறுத்தி ஆங்காங்கே கோரிக்கைகள் எழுந்தன. கருமண்டபம் பகுதியில் பொதுமக்கள் சிலர் ஒன்று கூடி மழைநீரை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருச்சி-திண்டுக்கல் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை சமாதனப்படுத்தி, அப்பகுதியில் போர்க்கால நடவடிக்கையாக மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். திருச்சி கருமண்டபம் மிகவும் தாழ்வான பகுதியாக இருந்ததாலும், எடமலைப்பட்டி புதுார் பகுதியிலிருக்கும் கொல்லாங்குளம் நிரம்பி வழிந்து, வடிகால்களில் முட்டி மோதி திக்குத்தெரியாமல் கருமண்டபம் பகுதி குடியிறுப்புகளுக்குள் புகுந்தது. இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் ராட்சத குழாய்கள் மற்றும் மோட்டார்களை அமைத்து மழைநீர் முழுவதும் இறைக்கப்பட்டு, எதிர் திசையில் இருந்த வடிகால்களில் விடப்பட்டது. நேற்று முதல் இப்பகுதியில் தேங்கிய மழைநீர் இறைக்கும் பணி இரவு வரை நீடித்தது. மாநகராட்சி கமிஷனர் சரவணன் மற்றும் மாநகர மேயர் அன்பழகன் ஆகியோர் மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மழைநீரை வெளியேற்றுவத்கான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கி, நிவாரணப்பணிகளை விரைவுப்படுத்தினர்.
தொடர்ந்து மாநகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை, மோட்டார் மூலம் இறைத்து அகற்றும் பணிகளை மாநகர மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உதவி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் விரைவுப்படுத்தினர்.
The post மழை நின்றபோதும் வடிகால்களில் வெள்ளம்: ராட்சத குழாய் வழியாக வெள்ளநீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.