திண்டுக்கல், டிச. 9: திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட குட்டியபட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் எஸ்ஐ அருண் நாராயணன், சிறப்பு எஸ்ஐக்கள் கருப்பையா, அரியவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனியாருக்கு சொந்தமான குடோனை திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர்.
அதில் விற்பனைக்காக குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 215 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும் புகையிலை பொருட்கள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், டூவீலர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
The post திண்டுக்கல் அருகே குடோனில் பதுக்கிய 215 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.