விழுப்புரம், டிச. 25: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் சூடுபிடித்துள்ள நிலையில் விழுப்புரத்தில் எம்ஜிஆர் நினைவுதினத்தையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போட்டி நிகழ்ச்சிகளை நடத்தினர்.
அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையேயான உட்கட்சி மோதல் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இதனிடையே ஜெயலலிதா, எம்ஜிஆர் பிறந்தநாள், நினைவு தினங்களை இரு அணியினரும் போட்டிபோட்டு நடத்தி வரும் நிலையில் தற்போது இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வரும்வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தில் இருதரப்பினரையும் வைத்து விசாரணை நடத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இருதரப்பும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதன்பேரில் இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகமும், ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில் நேற்றைய தினம் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி விழுப்புரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போட்டிபோட்டு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இபிஎஸ் தரப்பில் கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் ராமதாஸ் தலைமையில், துணை செயலாளர் செந்தில், தொகுதி வழக்கறிஞர் அணி ராதிகா செந்தில் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து 42 வார்டுகளிலும் இந்நிகழ்ச்சியை கொண்டாடினர். அதேபோல் ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் எம்பி ஏழுமலை தலைமையில் பானாம்பட்டு சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினர். இதில் மருத்துவ அணி கலைச்செல்வன், கமருதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதிமுகவில் இருதரப்பும் போட்டிபோட்டு நிகழ்ச்சிகளை நடத்தியதால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
The post எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி விழுப்புரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போட்டி நிகழ்ச்சி appeared first on Dinakaran.