வேலூர், டிச.25: வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட 7 மாவட்டங்களுக்கு 1,508 டன் யூரியா உரம் ஆந்திர மாநிலத்திலிருந்து காட்பாடிக்கு ரயிலில் நேற்று வந்தது. இவை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக உரம், பூச்சி மருந்துகள், அடி உரம், தெளிப்பு மருந்துகள் போன்றவை வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலமாக அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், சென்னை, தூத்துக்குடி நகரங்களில் இருந்து யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் சரக்கு ரயில்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த உரங்கள் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள கூட்டுறவு உரக்கிடங்குகள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் பகுதியில் இருந்து வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகளில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் 1,508 டன் யூரியா நேற்று ரயிலில் காட்பாடிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உரமூட்டைகள் லாரிகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) முருகன் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: காட்பாடி ரயில் நிலையத்திற்கு யூரியா 1,508 டன் உரம் ரயலில் வந்துள்ளது. இவை தனியார் உரக்கடைகளுக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் 100 டன்னும், ராணிப்பேட்டை 79.2 டன்னும், திருப்பத்தூர் 52.2 டன்னும், திருவண்ணாமலை 1112.4 டன்னும், திருவள்ளூர் 28.98 டன்னும், காஞ்சிபுரம் 54 டன்னும், செங்கல்பட்டு 81 டன் என மொத்தம் 1,508 டன் உரங்கள் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உரக்கடைகளில் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post 1,508 டன் யூரியா உரம் தெலங்கானாவிலிருந்து காட்பாடிக்கு ரயிலில் வந்தது லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர், திருவண்ணாமலை உட்பட 7 மாவட்டங்களுக்கு appeared first on Dinakaran.