மயிலம், டிச. 25: மயிலம் அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சூப்பர்வைசராக சங்கர், சேல்ஸ்மேன்களாக திருவேங்கடம், ராமமூர்த்தி, சோழன், அருள்தாஸ் ஆகியோர் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து விற்பனை பணத்தை எடுத்துக்கொண்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று அதிகாலையில் பாட்டில்கள் எடுக்க சிலர் வந்துள்ளனர். அவர்கள் டாஸ்மாக் பார் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் கடையின் சூப்பர்வைசர் சங்கர் மற்றும் மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த போலீசார் உடைக்கப்பட்ட பாரின் கதவை திறந்து பார்த்தபோது டாஸ்மாக் கடையின் சுவற்றில் ஒரு ஆள் செல்லும் அளவிற்கு துளை இடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். கொள்ளை அடிக்க வந்த நபர் கடையின் உள்ளே சென்று பணம் கிடைக்காததால் அங்கு இருந்த மதுபாட்டில்களை திறந்து தனக்கு தேவையான அளவிற்கு மது அருந்தி விட்டு விரக்தியில் திரும்பச் சென்றுள்ளது தெரிந்தது. இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே டாஸ்மாக் கடையில் 2018ம் ஆண்டு விற்பனை பணத்தை சேல்ஸ்மேன் திருவேங்கடம் மற்றும் போலீஸ் ஒருவர் பைக்கில் எடுத்துச் சென்றபோது பின் தொடர்ந்து வந்த கொள்ளையர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு ₹2 லட்சத்து 10 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் 2019ம் ஆண்டு இதே டாஸ்மாக் கடையை மூடிவிட்டு ஊழியர்கள் வெளியே பணத்தை வைத்துக்கொண்டு பாதுகாப்பு போலீசாருக்காக காத்திருந்தபோது கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி 47 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
மேலும் 2021ம் ஆண்டு இதேபோன்று கடை சுவற்றை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நான்காவது முறையாக கடை சுவற்றை இடித்து கொள்ளை முயற்சி நடைபெற்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post மயிலம் அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.