போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் மீது தாக்குதல்: போதை வாலிபர் கைது

அண்ணாநகர்: போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு போக்குவரத்து போலீசாரை நடுரோட்டில் தாக்கிய போதை வாலிபர் கைது செய்யப்பட்டார். கோயம்பேடு போக்குவரத்து போலீசார் ரமேஷ், விக்னேஷ் ஆகிய இருவர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, போதையில் வந்த வாலிபர், சாலையை கடக்க முயன்ற பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டார்.
இதனால், வாகனங்கள் செல்லமுடியாமல் நெரிசல் ஏற்பட்டது. உடனே, காவலர் ரமேஷ் அந்த நபரை பிடித்து எச்சரித்துள்ளார்.

அப்போது அந்த வாலிபர், நான் இந்த ஏரியா ரவுடி என்று கூறி திடீரென காவலரின் கன்னத்தில் சரமாரியாக தாக்கியதுடன் கீழே தள்ளிவிட்டு தப்பிக்க முயன்றார். இதை பார்த்த மற்றொரு காவலர் விக்னேஷ் ஓடிவந்து அந்த வாலிபரை பிடிக்க முயன்ற போது அவரையும் தாக்கி தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்தார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார், அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில், நெற்குன்றம் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் (26) என்பது தெரிந்தது. இதுசம்பந்தமாக போக்குவரத்து காவலர்கள் இருவரும் கொடுத்த புகாரின்படி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுவது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் மீது தாக்குதல்: போதை வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: