கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் இரும்பு உருக்காலையில் தாது சிதறி வட மாநில இளைஞருக்கு தீக்காயம்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 1வது வார்டு பகுதியில் 10க்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலை, அட்டை தொழிற்சாலை, ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மற்றும் சிறு தொழில்கள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு சில தொழிற்சாலைகள் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டுவது தொழிலாளர் பாதுகாப்பின்மை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமாக அதை ஒட்டி உள்ள கங்கா தொட்டி, விவேகானந்தா நகர், மாபொசி நகர் ஆகிய பகுதிகளுக்கு மேற்கண்ட இரும்பு உருக்காலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகைகள் குடியிருப்புவாசிகள் மத்தியில் பரவி வருகிறது. இதனால் வீடுகளில் பெண்கள் துணி காய வைக்கும் பொழுது அதில் மாலை நேரங்களில் இரும்பு துகள்கள் காணப்படுவதும் இதை அறியாமல் குழந்தைகள் முதல் பெரியவர்களை சுவாசிக்கின்றனர்.

இதுவரை அந்த பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் மற்றும் பல்வினை நோய்கள் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள கவுன்சிலர்கள் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்கள் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனிஷ்கா ஸ்டில் தொழிற்சாலையில் ஷிப்ட் முறையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தயாசங்கர்(28) இவர் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் பணிக்கு வந்தபோது இரும்பு உருக்காலை ஸ்டீல் வெளியேறும் பகுதியில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பர்னசில் உள்ள இரும்பு தாதுக்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. அதில் தயாசங்கர் தீ காயத்துடன் மயங்கி விழுந்தார். அவரை சக ஊழியர்கள் தனியார் சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நிர்வாகம் சார்பாக குக்கர் வெடித்து தீகாயம் ஏற்பட்டது என அந்த மருத்துவமனையில் ஏஆர் காப்பி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாலிபருக்கு தீ சதவீதம் அதிகரித்து இருப்பதால் அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்ல வேண்டுமென தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது இதை அறிந்த சிப்காட் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று மேற்கண்ட விவரங்களை சேகரித்தனர். அதில் குக்கர் வெடிக்கவில்லை. பர்னசில் உள்ள இரும்புத்தாது வெடித்து சிதறியதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பொய் தகவல் கூறிய நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிப்காட் போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்ந்து சிப்காட் பகுதியில் ஒரே மாதத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில், மேலும் ஒரு வட மாநில தொழிலாளி உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டு வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வுகளை தடுக்க வகையில் கிண்டியில் உள்ள தொழிலாளர் பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் இங்கு சோதனை செய்ய வேண்டும் எனவும் மேற்கண்ட பல தொழிற்சாலைகள் மீது பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் – தொழிலாளர்கள் புகார்கள் அளிக்க சிப்காட் பகுதியிலேயே அலுவலகம் அமைக்க வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் இரும்பு உருக்காலையில் தாது சிதறி வட மாநில இளைஞருக்கு தீக்காயம்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: