பாலாபுரம் கிராமத்தில் புதர் மண்டி காணாமல் போன கால்வாய்: சீரமைக்க வலியுறுத்தல்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு செல்லும் உபரிநீர் கால்வாய் முறையான பராமரிப்பின்றி, புதர் மண்டி காடாக மாறி காணாமல் போயுள்ளது. அக்கால்வாயை விரைவில் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த ஏராளமான மக்கள், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயத்தை மட்டுமே நம்பி தொழில் செய்து வருகின்றனர்.

இங்குள்ள ஏரிக்கு ஏற்கெனவே உபரிநீர் கால்வாய்கள் மூலமாக நீர்வரத்து இருந்துள்ளது. அதன்மூலம் இப்பகுதி மக்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாளடைவில் பாலாபுரம் ஏரிக்கு வரும் உபரிநீர் கால்வாய்கள் அனைத்தும் முறையான பராமரிப்பின்றி, முட்புதர் காடுகளாக மாறி முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் பாலாபுரம் ஏரிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் நெல், கரும்பு, வேர்க்கடலை, உளுந்து போன்ற உணவு தானியங்களை விளைவிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதி மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும், பொருளாதார வசதியும் முற்றிலும் முடங்கிவிட்டன.

இதுகுறித்து ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், ஏரிக்கு வரும் உபரிநீர் கால்வாய்களை சீரமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அடங்கிய பாலாபுரம் ஏரிக்கு வரும் உபரிநீர் கால்வாய் அனைத்திலும் படர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி தூர்வாரி சீரமைத்து, இப்பகுதி மக்களின் நீராதாரத்துக்கு விரைவில் பயன்படுத்த மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post பாலாபுரம் கிராமத்தில் புதர் மண்டி காணாமல் போன கால்வாய்: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: