கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் பணி தீவிரம்: விரைந்து முடிக்க உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் இருந்து தினசரி தூய்மை பணியாளர்களால் அகற்றப்படும் குப்பை, பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டாக கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் மலை போல் குவிந்துள்ளதால், சுற்றுப் பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், மழை காலங்களில் அளவுக்கு அதிகமான துர்நாற்றம், கொசு தொல்லை என பல்வேறு இடர்பாடுகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வந்தனர். ஒரு காலகட்டத்தில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதியில் அதிக அளவு மக்கள் தொகை கிடையாது. ஆனால் தற்போது பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் ஆகிய பகுதிகள் சென்னையோடு ஒன்றி, மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

பெருங்குடி குப்பை கிடங்கு 225.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை கொட்டப்பட்டு வருவதால் 34 லட்சம் கன மீட்டர் அளவில் பல்வேறு வகை குப்பை இங்கு குவிக்கப்பட்டுள்ளன. இந்த குப்பையை ரூ.350 கோடி மதிப்பீட்டில் பயோ மைனிங் செய்து அந்த நிலத்தை மாநகராட்சி சார்பில் மீட்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

பெருங்குடியை தொடர்ந்து தற்போது வடசென்னை பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான கொடுங்கையூர் குப்பை கிடங்கிலும் மலைபோல குவிந்துள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொடுங்கையூர் குப்பை கொங்கையூர், எம்கேபி நகர், வியாசர்பாடி, ஆர்கே நகர், மணலி, மாத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். இந்த திட்டம் மூலம், இங்கு மலை போல் குவிந்துள்ள குப்பை பயோ மைனிங் மூலம் மறு சுழற்சி செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம், காற்று மாசு குறைந்து, கொசு தொல்லையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் பணி தீவிரம்: விரைந்து முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: