இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் இக்காவல் நிலைய கட்டிடம் சிதிலமடைந்து பயன்பாட்டிற்கு லாக்கியற்ற நிலையில் காணப்பட்டது. இதனையடுத்து, திருத்தனி காவல் நிலையத்துக்கென்று கன்னிகாபுரம் செல்லும் சாலையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டதால், பழைய கட்டிடத்தை காலி செய்து காவல் நிலையம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பயனற்று காலியாக இருந்த காவல் நிலைய கட்டிடத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஆய்வாளர், உதவி ஆய்வளர் உள்பட 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வரும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் தற்போது பலவீனமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், இக்கட்டிடத்தில் அமர்ந்து பணியாற்ற காவலர்கள் அச்சமடைந்துள்ளனர். கட்டிடத்தில் ஆயுதங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் வைத்திருக்கவும் போதுமான பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. போலீசார் மற்றும் விசாரணை கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லாத கட்டிடத்தில் தொடர்ந்து மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருவதால் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது.
* எல்லைப் பகுதியில் குற்ற செயல்கள் அதிகரிப்பு
திருத்தணி ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு போன்ற பகுதிகள் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால், சாராயம், மது பாட்டில் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமல் பிரிவு வலுப்படுத்தி வசதிகள் செய்து தர ஏதுவாக நிரந்தரமான கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
* போலீசார் பற்றாக்குறை
ஆர்கே பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவில் காவல் ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ள நிலையில் காவலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திர எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் முழுமையான வாகன சோதனை மேற்கொள்ளப்படாததால், மலைப்பகுதிகளில் உள்ள ஆந்திர தமிழக எல்லைகளில் அதிக அளவில் சாராயம் உட்பட போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே எல்லையோர சோதனை சாவடிகள் வலுப்படுத்தும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏதுவாக மதுவிலக்கு அமல் பிரிவை வலுப்படுத்தி கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என்று எல்லை பகுதியில் உள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருத்தணியில் சிதிலமடைந்து காணப்படும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? போலீசார் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.