ஊழியர் திருமணத்திற்காக சிங்கப்பூரில் இருந்து அறதாங்கி வந்த முதலாளி

அறந்தாங்கி,டிச.5: அறந்தாங்கியில் நடைபெற்ற ஊழியர் திருமண விழாவிற்கு வந்த சிங்கப்பூர் முதலாளிக்கு சாரட்டு வண்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவர் சிங்கப்பூர் நாட்டில் சைட் மேனேஜராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அறந்தாங்கி கோட்டை பகுதியை சேர்ந்த சுபா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அறந்தாங்கி பட்டுகோட்டை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு சிங்கப்பூரில் உள்ள கிருஷ்ணகுமாரின் முதலாளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கம்பெனியின் நிறுவனர் கோலிங்என்ஜி மற்றும் இயக்குனர் கோஹ்கான் இருவரும் சிங்கப்பூர் நாட்டிலிருந்து நேற்று அறந்தாங்கிக்கு வந்திருந்தனர். அவருக்கு திருமண வீட்டார் சார்பில் பேண்ட் வாத்தியத்துடன் குதிரை வண்டி மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிருஷ்ணகுமார் – சுபா திருமணத்திற்கு முதலாளி தாலி எடுத்து கொடுத்து பரிசு வழங்கி வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், கிருஷ்ணகுமார் எனது நிறுவனத்தில் பணிபுரிகிறார். நல்ல மனிதர், சிறப்பாக பணியாற்றக்கூடியவர்.

அவருக்கு திருமணம் என அறிந்து நானும் கம்பெனி இயக்குனரும் வந்தோம், இங்கு குதிரை வண்டியில் தமிழ் கலாச்சாரப்படி நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடித்துள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது என்று தமிழில் நன்றி தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

The post ஊழியர் திருமணத்திற்காக சிங்கப்பூரில் இருந்து அறதாங்கி வந்த முதலாளி appeared first on Dinakaran.

Related Stories: