காஜியாபாத்: வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்கு புறப்பட்ட ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் குழுவை உபி போலீசார் காஜிபூர் எல்லையிலேயே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மஸ்ஜித், கோயில் மீது கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிகாரிகள் மசூதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் காரணமாக சம்பலில் கடந்த மாதம் 24ம் தேதி வன்முறை ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். நிலைமை மேலும் மோசமாவதை தடுக்க, வெளிநபர்கள் சம்பல் பகுதிக்கு செல்வதற்கான தடையை டிசம்பர் 31 வரை மாவட்ட நிர்வாகம் நீட்டித்துள்ளது. இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி ஆகியோர் கொண்ட காங்கிரஸ் குழு சம்பலுக்கு நேற்று செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ராகுல் தலைமையில் காங்கிரஸ் குழுவினர் காரில் டெல்லியில் இருந்து புறப்பட்டனர். அவர்களை, டெல்லி-மீரட் விரைவு சாலையில் உள்ள காஜிபூர் எல்லையில் உபி போலீசார் தடுத்து நிறுத்தினர். மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் மேற்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என தடுப்புகளை வைத்து திரும்பி செல்லும்படி கூறினர். அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி தான் மட்டும் தனியாக செல்ல தயாராக இருப்பதாக கூறியும் போலீசார் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் 2 மணி நேரம் அங்கேயே ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் காத்திருந்து விட்டு பின்னர் டெல்லி திரும்பினர். அப்போது, அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தி பேட்டி அளித்த ராகுல் காந்தி, ‘‘மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சம்பலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற எனக்கு உரிமை உள்ளது.
ஆனால் எனது அரசியலமைப்பு உரிமை பறிக்கப்பட்டுள்ளது. உபி போலீசாரின் செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது. இது, இந்தியாவில் அரசியலமைப்பு முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடப்பதை காட்டுகிறது. நாங்கள் தொடர்ந்து போராடுவோம்’’ என்றார். பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர். அவர் சம்பலுக்கு செல்வதை தடுக்க முடியாது. அவரை அனுமதிக்க வேண்டும்’’ என்றார். கலெக்டர் உத்தரவுப்படியே ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக காஜிபூர் போலீஸ் கமிஷனர் அஜய் மிஸ்ரா கூறி உள்ளார். ஏற்கனவே சமாஜ்வாடி, காங்கிரஸ் பிரதிநிதிகள் சம்பல் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், ஆய்வு செய்யவும் செல்ல முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
வீட்டு சிறையில் உபி காங். தலைவர்
ராகுல் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவில் இருக்க வேண்டிய தன்னை உபி அரசு வீட்டுச்சிறையில் அடைத்ததால் தன்னால் செல்ல முடியவில்லை என உபியின் காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் ஆராதான மிஸ்ரா மோனா கூறி உள்ளார்.
முஸ்லிம் ஓட்டுக்காக நாடகம்: பாஜ
உத்தரபிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் அளித்த பேட்டியில், ‘‘அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி இருவரும் முஸ்லிம் வாக்குகளை பெறுவதற்காக அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்கள் நாடகம் ஆடுகிறார்கள். சமாஜ்வாடி, காங்கிரஸ் இரண்டுக்கும் வீழ்ச்சி நிச்சயம்’’ என்றார்.
The post வன்முறையால் பாதித்த சம்பல் பகுதிக்கு புறப்பட்ட ராகுல், பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்: அரசியலமைப்பு உரிமை பறிக்கப்பட்டதாக கண்டனம் appeared first on Dinakaran.