வந்தே பாரத்தில் உணவு மோசம்; முதியோர் ரயில் டிக்கெட் சலுகை வழங்க வேண்டும்: மக்களவையில் விவாதம்

புதுடெல்லி: மக்களவையில், ரயில்வே சட்டங்களை எளிதாக்கும் வகையிலான ரயில்வே சட்ட திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் பங்கேற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பபி ஹல்தார், ‘‘கொரோனா காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண டிக்கெட் சலுகை ரத்து செய்யப்பட்டது. தற்போது 4 ஆண்டாகியும் இந்த சலுகை வழங்கப்படாமல் உள்ளது. இந்த சலுகையை உடனடியாக வழங்க வேண்டும்’’ என்றார். காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர், ‘‘வந்தே பாரத் ரயில்களில் உணவின் தரம் மோசமாக உள்ளது ’’ என்றார். ரயில் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கவலை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆண்டுக்கு 171 ஆக இருந்த ரயில் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. 2023-24ல் 40 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. நடப்பாண்டில் 29 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. ரயில்வே பட்ஜெட் 10 ஆண்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014ல் ரூ.29,000 கோடியாக இருந்த பட்ஜெட் ரூ.2.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிக்கெட் மானியமாக ரூ.56,993 கோடியை ரயில்வே வழங்கி வருகிறது. ஏசி பெட்டிகளுக்கு பதிலாக பொது பெட்டிகளை அதிகம் சேர்ப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ரயில்வேயில் 2,037 லோகோ பைலட்கள் உட்பட 99 ஆயிரம் பெண் ஊழியர்கள் இருக்கின்றனர்’’ என்றார்.

ஓய்வு பெறும் வயது அதிகரிக்க திட்டமா?
ஒன்றிய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘‘ஒன்றிய அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் காலி பணியிடங்களை நிரப்ப அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

The post வந்தே பாரத்தில் உணவு மோசம்; முதியோர் ரயில் டிக்கெட் சலுகை வழங்க வேண்டும்: மக்களவையில் விவாதம் appeared first on Dinakaran.

Related Stories: