பங்குதாரருடன் தகாத உறவு என சந்தேகம்; காரில் பெட்ரோல் ஊற்றி மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்: வாலிபர் காயங்களுடன் தப்பினார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பத்மராஜன் (60). இவரது மனைவி அனிலா (40). கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிலா கொல்லம் கடப்பாக்கடை பகுதியை சேர்ந்த ஹனீஸ் என்பவருடன் சேர்ந்து பேக்கரி தொடங்கினார். இது பத்மராஜனுக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அனிலாவுக்கும், ஹனீஸ்க்கும் இடையே தகாத உறவு இருப்பதாக சந்தேகித்தார். இது தொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. ஹனீஸ் உடன் சேர்ந்து பேக்கரி நடத்தக்கூடாது என்று பத்மராஜன் மனைவியிடம் தொடர்ந்து கூறி இருக்கிறார். இதற்கு அவர் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து பத்மராஜன் மனைவியின் பங்குதாரரான ஹனிஸிடமும் தகராறு செய்து உள்ளார். அப்போது தான் முதலீடு செய்துள்ள பணத்தை திருப்பித் தந்தால் விலகி விடுவதாக ஹனீஸ் கூறியுள்ளார்.

இந்த மாதம் 10ம் தேதி பணத்தை திருப்பித் தருவதாக பத்மராஜன் அவரிடம் கூறி இருக்கிறார். ஆனாலும் வாலிபர் மீது இருந்த ஆத்திரம் பத்மராஜனுக்கு குறையவில்லை. ஒரு கட்டத்தில் மனைவியையும், ஹனீஸையும் தீர்த்துக்கட்ட தீர்மானித்தார். இரவில் கடையை பூட்டிவிட்டு அனிலாவும், வாலிபரும் சில சமயங்களில் ஒன்றாகத் தான் காரில் வருவார்கள். அப்போது 2 பேரையும் காருக்குள் வைத்து தீ வைத்து எரித்துக் கொல்ல பத்மராஜன் திட்டம் போட்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் 3 லிட்டர் பெட்ரோல் வாங்கினார். அதன் பிறகு இரவு சுமார் 9 மணியளவில் தன்னுடைய காருடன் மனைவி வரும் வழியில் செம்மான்முக்கு என்ற பகுதியில் காத்து இருந்தார். பத்மராஜன் நினைத்தபடியே சிறிது நேரத்தில் அந்த வழியாக அனிலாவின் கார் வந்தது.

அவருடன் ஒரு வாலிபரும் இருந்து உள்ளார். அது கண்டிப்பாக மனைவியின் பங்குதாரரான ஹனீஸ்சாகத் தான் இருக்கும் என்று பத்மராஜன் கருதினார். ஆனால் அந்தக் காரில் அனிலாவின் பேக்கரியில் பணிபுரியும் ஊழியரான சோனி என்பவர் இருந்து உள்ளார். கார் அருகில் வந்ததும் பத்மராஜன் பாய்ந்து சென்று காரை நிறுத்தினார். உடனடியாக பெட்ரோலை அந்தக் காருக்குள் ஊற்றி லைட்டரால் தீ வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் காரில் தீ பற்றிக்கொண்டது. நடுரோட்டில் காரில் தீ பிடிப்பதை பார்த்ததும் அந்த பகுதியினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதில் அனிலா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த சோனி கொல்லம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே பத்மராஜன் கொல்லம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அனிலாவின் பங்குதாரரான வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார் .

The post பங்குதாரருடன் தகாத உறவு என சந்தேகம்; காரில் பெட்ரோல் ஊற்றி மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்: வாலிபர் காயங்களுடன் தப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: