23ம் தேதி முடிவுகள் வெளியாகின. பாஜ, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணிமொத்தமுள்ள 288 தொகுதிகளில் 235 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், கூட்டணிக்குள் உள்ள குழப்பம் காரணமாக புதிய அரசு பதவி ஏற்பது தாமதமாகி வந்தது. சிவசேனா தலைவரான ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க விரும்பி முரண்டு பிடித்தார். ஆனால், பாஜவை சேர்ந்தவருக்குதான் முதல்வர் பதவி என்று அக் கட்சி கூறியதால் தொடர் இழுபறி ஏற்பட்டது. பின்னர், டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின் ஷிண்டே பின்வாங்கினார்.
பாஜ மேலிடம் யாரை முடிவு செய்தாலும் அதற்கு சம்மதம் எனவும் அறிவித்தார். ஆனாலும் முதல்வரை தேர்வு செய்ய மும்பையில் 29ம் தேதி மகாயுதி கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடக்க இருந்த நிலையில், ஷிண்டே திடீரென தனது கிராமத்துக்குச் சென்றுவிட்டார். இதனால் முதல்வர் தேர்வு தாமதானது. இந்நிலையில், நேற்று காலை, பாஜ மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் முன்னிலையில், பாஜ சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில், மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு பட்நவிஸ் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் உடனே வெளியானது. மேலும், இன்று நடக்கும் விழா அழைப்பிதழும் அரசு சார்பில் வெளியிடப்பட்டது. அதில், பட்நவிஸ் முதல்வர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபோல்,2 பேர் துணை முதல்வர்களாக பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தான் துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
அடுத்த துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே என்று பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இதை ஷிண்டே தரப்பு உறுதிபடுத்தவில்லை. இதன்மூலம், 12 நாள் இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தேவேந்திர பட்நவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் ஆகியோர் நேற்று மதியம் ராஜ் பவன் சென்று, கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணைச் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இதையடுத்து, கவர்னர் ஆட்சி அமைக்க பட்நவிசுக்கு அழைப்பு விடுத்தார். கவர்னரைச் சந்தித்த பிறகு தேவேந்திர பட்நவிஸ் அளித்த பேட்டியில், ‘‘ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் கடிதம் கொடுத்தேன்.
அத்துடன், கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தையும் சமர்ப்பித்தோம். இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தோம். முதல்வர், துணை முதல்வர்கள் என்பது பெயரளவில்தானே தவிர, நாங்கள் மூவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்’’ என்றார். இன்று பதவியேற்பு விழா நடப்பதையொட்டி, மும்பை ஆசாத் மைதானம் உட்பட நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
* ‘காத்திருக்க முடியாது…’ அஜித்பவார் அவசரம் கலாய்த்த ஷிண்டே
இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் துணை முதல்வர்களாக பதவியேற்பீர்களா என அஜித்பவார் மற்றும் ஷிண்டேயிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஷிண்டே, ‘‘மாலை வரை காத்திருங்கள்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட அஜித்பவார், ‘‘என்னால் காத்திருக்கவெல்லாம் முடியாது. கண்டிப்பாக துணை முதல்வராக பதவியேற்பேன். என்னை எதுவும் தடுக்காது’’ என்றார். அப்போது சிரித்தபடி கைதட்டிய ஷிண்டே, ‘‘அவருக்கென்ன, காலையிலும், மாலையிலும் பதவிப் பிரமாணம் ஏற்ற அனுபவம் அவருக்கு உள்ளது’’ என்றார்.
* இளம் மேயரில் இருந்து முதல்வர் பதவி வரை
தேவேந்திர பட்நவிஸ் 1992ம் ஆண்டு நாக்பூர் மாநகராட்சி கவுன்சிலராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து இரண்டு முறை கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு, மேயராகவும் பதவி வகித்தார். இதன்மூலம் நாட்டின் 2வது இளம் வயது மேயர் என்ற பெருமையையும், நாக்பூரின் இளம் வயது மேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். தற்போது 3வது முறையாக அவர் முதல்வராக பதவியேற்கிறார். முதல் முறை 2014 அக்டோபர் 31 முதல் 2019 நவம்பர் 12ம் தேதி வரை 5 ஆண்டு 12 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ – சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் பதவியை பாஜ விட்டுதராததால், அப்போதைய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பிரிந்து சென்றார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் மற்றும் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பட்நவிஸ் முதல்வரானார். பதவியேற்று 5 நாட்களில் ஆட்சி கவிழ்ந்ததால் 5 நாட்கள், அதாவது 80 மணி நேரம் மட்டுமே முதல்வர் பதவியில் இருந்தார்.
The post 12 நாள் இழுபறி முடிவுக்கு வந்தது மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ்: மும்பையில் இன்று பதவியேற்பு விழா; பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.