பணியிலிருந்த போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்

புதுச்சேரி, டிச. 5: புதுச்சேரி சண்முகாபுரம் காவலர் குடியிருப்பு எம்.டி. யுனிட்டில் ஜெயசந்திரன் என்பவர் ரைட்டராக (ஏட்டு) பணிபுரிந்து வருகிறார். அதே எம்.டி. யுனிட்டில் கங்காதரன் என்பவர் (ஏஎஸ்ஐ) டிரைவராக உள்ளார். இருவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கங்காதரன் உயரதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதி ரைட்டரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த கடிதம் உயரதிகாரிக்கு அனுப்பி வைக்காமல் இருந்துள்ளது. நேற்று முன்தினம் காலை ஜெயச்சந்திரன் பணியை முடித்து, கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது கங்காதரன் ஏன் கடிதம் அனுப்பி வைக்கவில்லை என்று கேட்டதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதில் ஆத்திரமடைந்த கங்காதரன், ஜெயச்சந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதோடு, சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டதும் அங்கிருந்த மற்ற காவலர்கள் ஓடி வந்து மோதலை தடுத்தனர். பின்னர் காயமடைந்த ஜெயச்சந்திரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் குறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் ஜெயச்சந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின்பேரில் எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் கங்காதரன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர்.

The post பணியிலிருந்த போலீஸ் ஏட்டு மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: