பெஞ்சல் புயல் காரணமாக 300 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மனாளிநத்தம் பகுதியில் 300 ஆண்டு பழைய புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையின் இருபுறமும் புளியமரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு மரமும் நூற்றாண்டுகளை கடந்த மரங்களாகும். காலங்காலமாக அந்த சாலை வழியாக பைக்கில் செல்பவர்கள், நடைபயணமாக செல்பவர்கள் சற்று இளைப்பாறும் நோக்கத்தில் மரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில், கடந்த 30ம் தேதி பெய்தகனமழை மற்றும் பெங்கல் புயலினால் சூறாவளிக்காற்று வீசியது. இந்நிலையில், நேற்றுமுதல் மழை விட்டு விட்டு பெய்து வந்தநிலையில் எதிர்பாராத விதமாக செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலை மனாளிநத்தம் பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான புளியமரம் நேற்று அதிகாலை வேரோடு சாய்ந்து மின் கம்பத்தின் மீது விழுந்து.

அருகில் உள்ள ராஜாராம் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மதில் சுவர் மற்றும் அதன் அருகில் உள்ள சிறிய அறைகொண்ட பழைய வீட்டின் மீது விழுந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து முறிந்து விழுந்த மின் கம்பத்தை அகற்றி அறுந்துவிழுந்த கம்பிகளை சீர் செய்தனர். அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் 10க்கும் மேற்ப்பட்டோர் வேரோடு சாய்ந்த புளியமரத்தை அகற்றினர். அந்த புளிய மரம் சாலையில் விழாமலும் மரம் விழுந்த வீட்டில் யாரும் இல்லாததாலும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாதது குறிப்பிடத்தக்கது.

The post பெஞ்சல் புயல் காரணமாக 300 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: