இந்தச் சம்பவத்தில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. மேலும், 2 வீடுகளும் மண் சரிவுக்குள் சிக்கியுள்ளன. அந்த 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பியுள்ளனர். ஆனால், முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்த ராஜ்குமாரின் வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் நிலை என்ன? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது பிள்ளைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்.பி சுதாகர் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைவாகச் சென்று பார்வையிட்டனர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். இந்நிலையில், 2வது நாளாக மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் என்.டி.ஆர்.எஃப். உடன் இணைந்து மீட்பு பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் மீது விழுந்த பாறைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே வ.உ.சி. நகரில் மேலும் ஓரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
The post திருவண்ணாமலையில் மண் சரிவு.. 2வது நாளாக மீட்கும் பணி தீவிரம்: 7 பேரின் கதி என்ன? appeared first on Dinakaran.