இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் தா.பேட்டை தமிழ் மன்னன் என்பவர் கூறுகையில், தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நீர் நிலைகளில் இருந்து இலவசமாக மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது. அதற்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேலை தற்போது தொடர் மழை காரணமாக கார்த்திகை தீபத்திற்கு தேவையான அகல் விளக்கு செய்யும் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மண் கொண்டு தயார்செய்யும் அகல் விளக்கினை வெயிலில் உலர்த்தி அதன் பின்னர் சூளையில் வைத்து சுடுவது வழக்கம். தற்போது செய்யும் அகல்விளக்கை உணர்த்துவதற்கும் சூலை வைப்பதற்கும் வழியில்லாமல் உள்ளது. விட்டு விட்டு பெய்யும் தொடர் மழையால் மண்பாண்ட தொழிலாளர்களின் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரண உதவி வழங்கினால் உதவியாக இருக்கும்.
இது தவிர வரும் கார்த்திகை தீபத்தன்று புதிதாக மண்பாண்ட தொழிலாளர்களிடம் அகல்விளக்கு வாங்கி அதனை வீடுகளில் விளக்கேற்ற பயன்படுத்த வேண்டும். மண்பாண்ட தொழில் பெரிதும் நலிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் வாங்கும் அகல் விளக்கு மண்பாண்ட தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பேருதவியாக அமையும். மண்பாண்ட தொழிலாளர்கள் பஞ்சபூதங்களான நிலம் நீர் நெருப்பு காற்று ஆகியவற்றை நம்பி வாழ்க்கை நடத்துகிறோம். எனவே, பஞ்சபூதங்களை உள்ளடக்கி செய்யப்பட்ட அகல்விளக்குகளை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியதாகவும் இருக்கும். இருளைப் போக்கி வெளிச்சத்தை தர உதவும் அகல் விளக்கு தயாரிக்கும் மண்பாண்ட தொழிலாளர்களின் வறுமை என்னும் இருளை போக்கிட பொதுமக்கள் கார்த்திகை தீபத்திருநாளில் புதிய விளக்குகள் வாங்கி விளக்கேற்ற வேண்டும் என்று கூறினார். அகல் விளக்கு இரண்டு ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் 50 மில்லி 100 மில்லி 250 மில்லி அளவு வரை எண்ணை ஊற்றி விளக்கேற்றும் வகையில் விளக்குகள் தயார் செய்யப்படுகிறது. ஒரு முகம், ஐந்து முகம், பாவை விளக்கு, தூண்டா மணி விளக்கு என பல்வேறு மாடல்களில் விளக்குகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
The post தொடர் மழை காரணமாக அகல்விளக்கு தயாரிக்கும் பணி பாதிப்பு: மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை appeared first on Dinakaran.