சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொழில்நுட்பங்களின் உதவி கொண்டு நீர் மேலாண்மையை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சுமார் ரூ.68 கோடி மதிப்பீட்டில் நிகழ்நேர வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்பு எனும் திட்டம் நீர்வளத்துறை சார்பில் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக பிரத்யேக செல்போன் செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சென்னை மாநகரத்தில் நீர் மேலாண்மை மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை ஜப்பான் பன்னாட்டு நிதியுதவிடன் உருவாக்கும் முயற்சியில் தமிழக நீர்வளத்துறை 2 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.
வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள முறையான ஆய்வு சார்ந்த திட்டமிடல் வேண்டும். துரிதகால, நீண்டகால நடவடிக்கைகள், மழை அளவை கொண்டு செய்ய வேண்டிய பணிகள், தண்ணீர் தேங்கும் பகுதிகளின் விவரம், அதை தடுப்பதற்கான வழிமுறைகள், கால்வாய்களை அகலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் ஜப்பான் நிறுவனத்துடன், நீர்வளத்துறை இணைந்து அடையாறு ஆற்றில் ஒரு பகுதியான மணப்பாக்கம் கால்வாயில் நீரின் அளவை கண்காணிக்க தானியங்கி கேம்ரா நீர் வெளியேற்றும் இடத்தில் (ரெகுலேட்டர்) பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ள நீரை ஒழுங்குபடுத்தவும், சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ள பெருக்கைக் குறைக்க உதவும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மணப்பாக்கம் கால்வாயானது வினாடிக்கு 650-700 கனஅடி நீர் செல்லும் திறன் கொண்டது. அதேபோல் உபரி நீரின் 50 சதவீதம் வரை மற்ற சிறு வாய்க்கால்களுக்கு திருப்பிவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், மதானந்தபுரம், மணப்பாக்கம், கொளப்பாக்கம் மற்றும் முகலிவாக்கம் போன்ற பகுதிகளில் பருவமழையின் போது வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மணப்பாக்கம் லிட்டில் பிளவர் பள்ளிக்கு அருகில் உள்ள மணப்பாக்கம் கால்வாயின் நீர்வெளியேற்றும் இடத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஹெய்வான ஜோஹோ சிஸ்டம் நிறுவனத்துடன் இணைந்து நீரின் அளவை கண்காணிக்க தானியங்கி கேம்ரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அளவை சரியாக கண்காணித்து செயல்பட்டால் பிற நீர் வழித்தடங்களிலும் இதே முறையை கையாள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வெள்ள நீர் ஓட்டம், பிற நீர் வழித்தடங்களுக்கு வெள்ளம் திருப்பி விடப்படுவதை கண்காணிக்க உதவும். இந்த பணிகள் இந்த வாரத்திற்கு நிறைவடைய உள்ளது.
இதனிடையே 2021-22, 2023-24ம் ஆண்டில் ரூ.334 கோடியில் நீர்நிலைகளை தூர்வாருதல் மற்றும் கால்வாய்களை அகலப்படுத்தும் பணியின் ஒரு பகுதியான போரூர் ஏரி பகுதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. போரூர் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறு கால்வாய்கள், அடையாறு ஆற்றில் வடிகால்களை மேம்படுத்த இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட வெள்ளத் தணிப்புத் திட்டங்களுக்குப் பிறகு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நீரின் அளவை கண்காணிக்க தானியங்கி கேமரா மூலம் கால்வாய்களின் உள்ள நீரின் ஓட்டம் பற்றி உடனடியான அறிவிப்புகள் பெற முடியும். அதேபோல் இந்த பகுதியில் அதிகப்படியான நீர்வரத்து இருக்கும் போது கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் வாய்க்கால்களுக்கு திருப்பி விடப்படும். இதன் மூலம் மணப்பாக்கம் கால்வாயில் ஏற்படும் வெள்ள மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ள பெருக்கு ஏற்படுவதை தடுக்க முடியும். அதிகளவு மழைப்பொழிவின் போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு கண்காணிக்கவும், வெள்ளத்தை குறைப்பதற்கும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து மணப்பாக்கம் கால்வாய் நீரின் அளவை கண்காணிக்க தானியங்கி கேமரா: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.