திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள 20 குளங்களை சீரமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சிங்கமுக தீர்த்தம், சூர்ய தீர்த்தம், நிருதி குளம், அடி அண்ணாமலை குளம் உள்பட ஏராளமான குளங்கள் உள்ளன. பருவமழை தீவிரமடையும் முன்பு இந்த குளங்களை சீரமைத்தால் நிலத்தடிநீர் உயரும் என்பதால், குளங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள் மற்றும் தூய்மை அருணை தன்னார்வ அமைப்பு இணைந்து குளங்களை சீரமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, கிரிவலப் பாதையில் உள்ள 20 குளங்களை சீரமைக்கும் பணியின் தொடக்கமாக, செங்கம் இணைப்பு சாலையில் சிவில் சப்ளை குடோன் அருகில் உள்ள வறட்டு குளத்தை சீரமைக்கும் பணி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.
குளங்களை சீரமைக்கும் பணியை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். மேலும், தூய்மை அருணையின் சீருடையான மஞ்சள் நிற டி- ஷர்ட் அணிந்து அமைச்சரும் இப்பணியில் ஈடுபட்டார். அதையொட்டி, தூய்மை அருணை அமைப்பை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் உட்பட சுமார் 1,000 பேர் ஒருங்கிணைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், தூய்மை அருணை அமைப்பு பல ஆண்டுகளாக நீர்நிலைகளை பாதுகாத்தல், நகரை தூய்மைபடுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அமைப்பாளராக நானும், 4 மேற்பார்வையாளர்கள், 40 குழுக்களுக்கு 40 ஒருங்கிணைப்பாளர்கள் என 1,000 பேர் அதில் உள்ளனர்.
தூய்மை அருணை அமைப்பும், நூறு நாள் தொழிலாளர்களும் இணைந்து 20 குளங்களை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட உள்ளோம். விரைவில், இந்த பணிகள் முடிவடையும். அதேபோல், திருவண்ணாமலை நகரில் மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்கும் பணிகள் விரைவில் நடைபெறும் என்றார்.
குளங்கள் சீரமைக்கும் பணியில், டிஆர்ஓ ராமபிரதீபன், தூய்மை அருணை மேற்பார்வையாளர்கள் டாக்டர் எ.வ.வே. கம்பன், இரா.ஸ்ரீதரன், ப.கார்த்தி வேல்மாறன், பிரியா விஜயரங்கன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, பிடிஓக்கள் பரமேஸ்வரன், பிரித்திவிராஜ், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தூய்மை அருணை சார்பில் கிரிவலப்பாதையில் 20 குளங்கள் சீரமைக்கும் பணி appeared first on Dinakaran.