சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட தின விழா மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, வழக்கறிஞர் அணி தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் சிறுபான்மையினர் நல ஆனைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், பொருளாளர் ரூபி மனோகரன், காந்திய சிந்தனையாளர் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கருத்துரை நிகழ்த்தினர்.
முன்னதாக இந்திய அரசியலைப்பு சட்ட தின விழாவை முன்னிட்டு அரசியலைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பு சட்ட முகப்புரையை உறுதிமொழியாக ஏற்றனர். இதை தொடர்ந்து, பெரும்புதூர் பகுதியை சார்ந்த பார்வையற்ற கல்லூரி மாணாக்கர்களுக்கு பிரெய்லி வடிவிலான இந்திய அரசியலைப்பு சட்ட புத்தகத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வழங்கினார். விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தை எப்படி எல்லாம் ஒழிக்க முடியும் என்று பாஜவினர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தை பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தங்கள் கட்டுக்குள் வைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், உ.பலராமன், பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, வக்கீல் செல்வம், அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய பாஜ அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்: அரசியலமைப்பு சட்டத்தை ஒழிக்க முயற்சி செய்கிறார்கள் appeared first on Dinakaran.