எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் தோற்பதற்கு காரணம் காங்கிரஸ்; மம்தாவை ‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக்குங்கள்!: அவரவர் ஈகோவை ஒதுக்கி வைக்குமாறு திரிணாமுல் எம்பி காட்டம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநில இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட்ட 6 இடங்களிலும் வெற்றிப் பெற்றது. அதனால் அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் புதிய உற்சாகத்தில் உள்ளனர். கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை சம்பவம் முதல்வர் மம்தாவுக்கு பல வகையில் நெருக்கடி கொடுத்த நிலையில், தற்போதைய இடைத்தேர்தல் முடிவு ஆளும் திரிணாமுல் கட்சிக்கு புதிய தெம்பை கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான கல்யாண் பானர்ஜி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் கட்சி தனது ஆணவத்தை கைவிட்டு, மம்தா பானர்ஜியை ‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி என்ன செய்தது? ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டும், அதன் தலைவர் யார்? என்பதை அறிவிக்கவில்லை. எதிர்க்கட்சியின் முகமாக யாரும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்போதாவது இந்தியா கூட்டணிக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அரியானாவில் தோற்ற காங்கிரஸ் தற்போது மகாராஷ்டிராவிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும் போது, காங்கிரஸ் கட்சி மட்டும் தோற்கவில்லை; காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்திருந்த நாங்கள் உட்பட அனைவரும் தோற்றுவிட்டோம்.

புரிந்துகொள்ள முயற்சிப்போம். எதிர்க்கட்சியில் எந்தப் பிரிவினையும் இல்லை; ஆனால் அனைவரையும் ஒன்றிணைந்து அழைத்துச் செல்ல வேண்டும். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் எங்களை (திரிணாமுல்) மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் அழைத்ததா? அரியானாவில் எங்களை அழைத்தார்களா? ஏன்? காரணம் என்ன? பாஜகவுக்கு எதிராக, மோடிக்கு எதிராக போராடுவதே எங்கள் நோக்கம். அரியானா, மகாராஷ்டிராவில் தோற்றதற்கான காரணங்களை ஆராய வேண்டும். மக்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் நிலையில் காங்கிரஸ் இல்லை. எனவே மம்தா பானர்ஜி ஒரு போராடும் தலைவர். பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவராக ஆக்குவதற்கு பொருத்தமானவர் ஆவார். காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் சமீபத்திய நடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளை ஏற்றுக்கொண்டு தனிப்பட்ட லட்சியத்தை விட கூட்டணியின் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவரவர்களின் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, மம்தா பானர்ஜியை ‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த மற்றும் சரியான அணுகுமுறை இல்லாமல், எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் தொடர்ந்து தடுமாறிக்கொண்டே இருக்கிறது’ என்றார்.

The post எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் தோற்பதற்கு காரணம் காங்கிரஸ்; மம்தாவை ‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக்குங்கள்!: அவரவர் ஈகோவை ஒதுக்கி வைக்குமாறு திரிணாமுல் எம்பி காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: