திமுக கூட்டணி பலமா இருக்கு ரூ.1000 உரிமைத்தொகையால் மகளிர் ஓட்டு குறைஞ்சு போச்சு: கள ஆய்வில் அதிமுக எம்எல்ஏ புலம்பல்

கோபி: கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர்கள் முன்னிலையில் அதிமுக எம்எல்ஏ, திமுக கூட்டணி பலமாக இருக்கிறது, ரூ.1000 உரிமைத்தொகையால் மகளிர் ஓட்டு நமக்கு குறைஞ்சு போச்சு, இளைஞர்கள் வர மறுக்கின்றனர் என்று புலம்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், கோபியில் தனியார் மண்டபத்தில் அதிமுக கள ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வரகூர் அருணாச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி பேசியதாவது: திமுக கூட்டணி பலமாக உள்ளது. திமுக அரசு மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கொடுப்பதால், மகளிர் வாக்கு அதிமுகவிற்கு குறைவாக உள்ளது. அதிமுகவில் இளைஞர்கள் வருகை குறைவாகவே உள்ளது. 1972ல் கட்சியில் இருந்தவர்கள்தான் இன்றும் உள்ளனர். இளைஞர்களை கட்சிக்கு கொண்டு வர நிர்வாகிகள் முன் வர வேண்டும். அதிமுக வாட்ஸ் அப் குழுவாலும் பலனில்லை. ஏராளமான குழுக்களை வைத்து குட்மார்னிங், குட் நைட் மட்டுமே பதிவிட்டு வருகின்றனர்.

அதிமுகவிற்கு இளைஞர்கள் வர மறுக்கின்றனர். மேடையில் உள்ள நிர்வாகிகள், அதிமுகவிற்கு என நட்சத்திர பேச்சாளர்களை உருவாக்கி கொடுங்கள். தினமும் ஒரு மணி நேரமாவது கட்சியினர் பாடுபட வேண்டும். ஏனோதானோவென்று இருந்தால் வெற்றி பெற முடியாது. அதிமுக கட்சி தொடங்கியதில் இருந்து இதுவரை கட்சியில் உள்ளவர்களுக்கு பொற்கிழி பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கள ஆய்வு கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏ, திமுக அரசின் திட்டங்களால் அதிமுகவிற்கு மகளிர் வாக்கு கிடைப்பது இல்லை என்றும், இளைஞர்கள் அதிமுகவிற்கு வருவதில்லை என்றும், அதிமுகவில் நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை என்றும் புலம்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திமுக கூட்டணி பலமா இருக்கு ரூ.1000 உரிமைத்தொகையால் மகளிர் ஓட்டு குறைஞ்சு போச்சு: கள ஆய்வில் அதிமுக எம்எல்ஏ புலம்பல் appeared first on Dinakaran.

Related Stories: