3 மாதங்களுக்கு ஒரு முறை வணிகர் சங்க பிரதிநிதிகளிடம் ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி சம்பந்தமாக ஆலோசனை நடத்த வேண்டும்: திமுக வர்த்தகர் அணி தீர்மானம்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாளை, வர்த்தக அணியின் சார்பில் வரும் டிசம்பர் 26 வரை ஒரு மாதத்திற்கு, பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக நடத்துவது. 3 மாதங்களுக்கு ஒரு முறை வணிகர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சம்பந்தமாய் ஆலோசனை நடத்திட வேண்டும். திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகளை வணிகர் நலன் வாரிய குழுவில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

வெள்ள பாதிப்புக்கு உட்பட்ட கடைக்காரர்களுக்கு இதுவரை ஒன்றிய அரசு ஒரு உதவியும் செய்யாததுடன், தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமலிருக்கும் ஒன்றிய அரசை கண்டிக்கிறோம். சென்னை மாநகராட்சி தொழில் வணிக உரிமம் 3 ஆண்டுகளுக்கு 1 முறை புதுப்பிக்கும் நடைமுறை சட்டத்தை தமிழக வணிகர்களின் நலன் பேணும் வகையில் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றியை தெரிவிப்பதோடு பல மடங்கு உயர்த்தப்பட்ட தொழில் வணிக உரிமத்தின் கட்டணத் தொகையை வணிகர்களின் இன்றைய சூழ்நிலையை கருதி சற்று குறைக்க வேண்டுகிறோம். சென்னையில் சிறிய மற்றும் நடுத்தர வணிகர்கள் கடைகளுக்கு வெளியில் குப்பை சேமிப்பு பெட்டி வைக்கவில்லை என கூறி மாநகராட்சி அதிகாரிகள் வணிகர்களிடம் 500 முதல் 5000 வரை உடனடி அபதாரம் விதித்து வருகிறார்கள். இதனால் சிறிய நடுத்தர வணிகர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே சென்னை மாநகராட்சி மேயர் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post 3 மாதங்களுக்கு ஒரு முறை வணிகர் சங்க பிரதிநிதிகளிடம் ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி சம்பந்தமாக ஆலோசனை நடத்த வேண்டும்: திமுக வர்த்தகர் அணி தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: