தமிழ்நாடு முழுவதும் அடிதடி: அதிமுக கள ஆய்வு கூட்டம் திடீர் ரத்து

சேலம்: சேலத்தில் நேற்று நடக்க இருந்த அதிமுக களஆய்வு கூட்டம் ரகசியமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அடிதடி, தள்ளுமுள்ளு ஆகியவை நடந்து வருகிறது. இந்தநிலையில் சேலத்தில் நேற்று (செவ்வாய்) நடக்க இருந்த களஆய்வு கூட்டம் ரகசியமாக ஒத்தி வைக்கப்பட்டு விட்டது.

சேலத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நாமக்கல் தங்கமணி ஆகியோர் தலைமையில் களஆய்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாகர்கோவில், நெல்லை, கும்பகோண்ம், மதுரை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் நடந்த கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் அடிதடியில் ஈடுபட்டதால் சேலத்தில் நடக்க இருந்த கூட்டம் திடீரென தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சேலம் மாநகரத்தை பொறுத்தவரையில் பொறுப்பாளராக மொரப்பூர் மாஜி எம்எல்ஏ சிங்காரம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வேண்டியவர்களுக்கு பொறுப்புகள் வழங்குவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் கள ஆய்வின்போது மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதையொட்டி ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். அதேநேரத்தில் இந்த களஆய்வு கூட்டம் 29ம்தேதி நடக்கும் என தெரிகிறது. இந்நிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வருகிறார். அவர் சேலத்தில் நடக்கும் களஆய்வு கூட்டத்தில் கலந்துகொள்வார் என தெரிகிறது.

‘ஜனநாயகம் இருப்பதால அடிச்சுக்கிறாங்க…’ உதயகுமார் காமெடி
மதுரை மேற்கு மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு திருமங்கலத்தை அடுத்த டி.குன்னத்தூரில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் கள ஆய்வை நடத்தினர். மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமை வகித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் உதயகுமார் பேசுகையில், ‘‘அதிமுகவில் கள ஆய்வு நடைபெற்ற கும்பகோணம், மதுரையில் கட்சியினர் மோதிக் கொண்டனர். கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என்று அர்த்தம். ஜனநாயகம் இருப்பதால் தான் கட்சியில் சலசலப்பு, மோதல் வருகிறது. அதிமுகவில் இதற்கு முன்பு பெரிய அளவில் மோதல்கள் நடந்துள்ளன. அதனை தூக்கி எறிந்து டேக் இட் ஈசியாக கட்சி முன்னேறியுள்ளது’’ என்றார்.

The post தமிழ்நாடு முழுவதும் அடிதடி: அதிமுக கள ஆய்வு கூட்டம் திடீர் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: