* கடல்சார் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு புது முயற்சி
இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது நீளமான கடலோரப் பகுதியை கொண்டது, தமிழகம். திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு பகுதி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏழுதேசம் வரை சுமார் 1,076 கிலோ மீட்டர் (669 மைல்) நீள கடற்கரை அமைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பாம்பன் தீவு, பாக். நீரிணை, மன்னார் வளைகுடா, இலங்கையின் ராமன் சேது பாலம் ஆகியவற்றை இணைக்கிறது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்கள் இக்கடலோரப்பகுதியில் அமைந்துள்ளன. இந்திய தீபகற்பத்தில் வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், பாக்.ஜலசந்தி பகுதிகள் அமைந்துள்ள ஒரே மாநிலம் தமிழகமாகும்.
1076 கிலோ மீட்டர் நீளமுள்ள தமிழக கடற்கரையை நம்பி லட்சக்கணக்கான மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மீனவர்கள் இயந்திரப் படகுகள், இயந்திரம் இல்லாமல் இயங்கக்கூடிய படகுகள் என இரண்டு வகையான மீன்பிடிப்பு கலன்களை பயன்படுத்துகின்றனர். கட்டுமரம், கடல் தோண்டி, தோணி, மரப்பலகை தோணி, மிதவை தோணி, மசுலா படகு, கட்டமைப்பு படகு ஆகியவை இயந்திரம் இல்லாமல் இயங்கக்கூடிய படகுகள் ஆகும். சிறு அல்லது நடுத்தரம், சுமார் 10 மீட்டர் முதல் 15 மீட்டர் நீளமுள்ள படகுகளில் இயந்திரம் பொருத்தப்பட்டு அவைகளின் மூலம் தொலைவான இடங்களுக்குச் சென்று மீன்பிடிக்க தூண்டில் படகு, பொறிப்படகு, செவுள்வலைப் படகு, விசைப்படகு ஆகிய 4 வகை இயந்திர மீன்பிடிப்புப் படகுகளை பயன்படுத்துகின்றனர். தமிழக அரசு மூலம் மீனவர்களின் மீன்பிடி படகுகளுக்கு எரிபொருளாக தற்போது மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இதனால் கார்பன் மோனாக்சைடு வெளியாவது முற்றிலும் குறைக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இருப்பினும் படகுகளில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெயால் கடல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசு மாற்று முயற்சியாக மீனவர்களுக்கு எல்பிஜி காஸால் இயக்கப்படும் மீன்பிடி நாட்டு படகுகளை பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டமன்றத்தில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு 19 கிலோ எடையுள்ள கமர்ஷியல் சிலிண்டர்கள், மண்ணெண்ணெய்க்கு பதிலாக வழங்கப்படும். இதற்காக ₹1 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். மீன்பிடி படகுகளில் எல்பிஜி காஸை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை சர்வதேச அளவிலான நிறுவனம் மூலம் இயக்கி பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
படகுகளில் மண்ணெண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தும் போது கார்பன் மோனாக்சைடு 1.2 சதவீதம் வெளியாவதாகவும், மண்ணெண்ணெய்க்கு பதிலாக படகுகளில் எல்பிஜி காஸை எரிபொருளாக பயன்படுத்தும் போது வௌியாகும் கார்பன் மோனாக்சைடு சதவீதம் 1.2ல் இருந்து 0.32 சதவீதமாக குறைவதும் தெரியவந்துள்ளது. எல்பிஜி காஸை பயன்படுத்துவதன் மூலம் 56.54 சதவீதத்திலிருந்து 65.64 சதவீதம் வரை எரிபொருள் மிச்சமாகும் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே சிறிய குதிரைதிறன்கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தும் மீன்பிடி படகுகளுக்கு எல்பிஜி காஸை மாற்றி பயன்படுத்தும் விதமாக இயக்கினால் அதற்கு அரசு தலா ₹1 லட்சம் மானியமாக வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. எல்பிஜி காஸை தங்களது மீன்பிடி படகுகளில் எரிபொருளாக பயன்படுத்தும் மீனவர்களுக்கு இதுகுறித்து பயிற்சியும் அடுத்தடுத்து வழங்கப்பட உள்ளது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் 150 மீன்பிடி படகுகளுக்கு மண்ணெண்ணெய்க்கு பதிலாக எல்பிஜி காஸ் பயன்படுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முதன் முதலாக மண்ணெண்ணெய்க்கு பதிலாக மீன்பிடி படகுகளில் எல்பிஜி காஸ் பயன்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணெண்ணெய் எப்படி கிடைக்கிறது
மண்ணெய் என்றும் மண்ணெண்ணெய் என்றும் அழைக்கப்படும் எரிபொருள் நிறமற்ற ஹைட்ரோகார்பன் எரிபொருளாகும். இது பெட்ரோலியத்திலிருந்து 150 °C யிலும் 275 °C யிலும் பிரித்தெடுக்கப்படுகிறது. மண்ணெண்ணெய் தண்ணீரை போல நிறமற்றது. தண்ணீரும் மண்ணெண்ணெயும் ஒரே மாதிரி இருப்பதால் நடக்கும் அறியாத விபத்துகளை தவிர்க்கவும் அரசாங்கத்தால் மானிய விலையில் வழங்கப்படுவதை தனித்து காட்டவும் ரேஷன் கடைகளில் விற்கப்படும் மண்ணெண்ணெய்க்கு நீல நிற சாயம் சேர்க்கப்படுகிறது.
விசைப்படகுகள் அதிகம்
இந்தியாவில் கடல் மீன்பிடிப்பு வளம் மூலம் இரண்டு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. கடல்மீன் பிடிப்பிற்கு பயன்படுத்தும் கப்பல் மற்றும் படகுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, அதாவது 2,80,491 கப்பல்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இதில் பழைமையான கப்பல்கள் 1,81,284 ஆகும். இயந்திர படகுகள் 44,578 மற்றும் விசைப்படகுகள் 53,684. மொத்த கடல் மீன் பிடிப்பில் பழைய, இயந்திரம் மற்றும் விசைப் படகுகளின் பங்கு முறையே 9 விழுக்காடு, 26 விழுக்காடு மற்றும் 65 விழுக்காடு ஆகும்.
லாபம் மிஞ்சும்
₹60 லட்சத்தில் இருந்து ₹80 லட்சம் வரை மதிப்புள்ள விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் கைகொடுக்கின்றன. விசைப்படகுகளைப் பொறுத்தவரை அதன் விலை, பராமரிப்புச் செலவு, எரிபொருள் செலவு எல்லாமும் அதிகம். விசைப்படகில் கடலுக்குச் சென்று வெறுங்கையுடன் திரும்ப நேர்ந்தால் மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். தற்போது தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. மீன்பிடி வருமானத்தில் எரிபொருள் செலவை ஈடுசெய்ய முடியாததால் விசைப்படகுகளுக்கு மாற்றாக, மீண்டும் பைபர் படகுகளை மீனவர்கள் அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். காஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்தால் மீனவர்களுக்கு கொஞ்சம் லாபம் மிஞ்சும்.
The post நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் காஸ் மூலம் படகு இயக்கம்: தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் விரைவில் அமல் appeared first on Dinakaran.