டெல்டாவில் கனமழை: 2 லட்சம் மீனவர்கள் முடக்கம்: புதுச்சேரி, 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


திருச்சி: பலத்த மழை காரணமாக டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 2 லட்சம் மீனவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். மழை நீடிப்பதால், புதுச்சேரி மற்றும் 7 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்துக்கு நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்தது.

மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என கடந்த 19ம்தேதி மீன்வளத்துறை அறிவித்தது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் 1.70 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதேபோல் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் 5 ஆயிரம் படகுகள் கடலுக்கு செல்லவில்லை. 20 ஆயிரம் மீனவர்கள் வீடுகளில் முடங்கினர். கடலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை சாரல் மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் வந்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்கிறது.

செஞ்சி, திண்டிவனம், மரக்காணம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. ஏரி, நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 5,000 படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. புதுச்சேரியில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. மீன்வளத்துறை எச்சரிக்கையால் கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் 11 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கினர். இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று (27ம்தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் குடியிருப்புகளில் கடல்நீர் சூழ்ந்தது
புயல் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டது. தீவு பகுதி முழுவதும் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது. குருசடை தீவுக்கு வனத்துறை சார்பில் இயக்கப்படும் சுற்றுலா படகு சவாரி நேற்றும் நிறுத்தப்பட்டது. பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் கடல் பெருக்கு ஏற்பட்டு கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல், படிக்கட்டுகளுக்கு மேலே உயர்ந்துள்ளது. தனுஷ்கோடி தென்கடல் அரிச்சல்முனை சாலையின் பாறை தடுப்புகளை எட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பாம்பன் துறைமுகம் அலுவலகம் அருகே உள்ள மீனவ குடியிருப்பு பகுதிகளை கடல்நீர் சூழ்ந்துள்ளது.

மதுரையில் பனிமூட்டம்: வானில் வட்டம்அடித்த விமானம்
ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் இருந்து மதுரைக்கு தினசரி 2 சேவைகளை தனியார் விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த விமான சேவை கடந்த நவ. 19ம் தேதி தொடங்கி இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 6.30 மணிக்கு தனியார் விமானம் ஐதராபாத்தில் இருந்து 120 பயணிகளுடன் புறப்பட்டு காலை 8.05 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தது. ஓடுபாதையில் கடும் பனி மூட்டம் இருந்ததால் விமானத்தால் தரையிறங்க முடியவில்லை. இதனால், பனி விலகும் வரை சுமார் 10 நிமிடம் குறிப்பிட்ட தொலைவிற்குள் வானில் வட்டமடித்தது.

பெருங்குடி விமான நிலைய பகுதியில் இருந்து விராதனூர், திருமங்கலம் என வட்டமடித்தது. இப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானத்திற்குள் இருந்த பயணிகளும் பதற்றமடைந்தனர். இதனால் பனி மூட்டம் பற்றிய தகவல் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஓடுபாதையில் பனி மூட்டம் விலகியதும் பத்திரமாக விமானம் தரையிறங்கியது. பின்னர், இங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு விமானம் ஐதராபாத் புறப்பட்டது.

The post டெல்டாவில் கனமழை: 2 லட்சம் மீனவர்கள் முடக்கம்: புதுச்சேரி, 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: