திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரூ.134 கோடியில் கலை பொருட்கள் விற்பனை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் ரூ.134 கோடியே 8 லட்சம் மதிப்பிலான கலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். பூம்புகார் கைவினைக் கலைஞர்கள் விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.
விழாவில் 227 கைவினை கலைஞர்களுக்கு ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ரொக்க பரிசு, தங்கப்பதக்கத்தை அமைச்சர் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது: தமிழ்நாட்டில் 130 இடங்கள் கைவினை கலைஞர்கள் அதிகம் உள்ள இடங்களாகவும், இதில் 40 இடங்கள் மிக முக்கிய கைவினை பொருட்கள் தயாரிக்கும் இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது. பூம்புகார் நிறுவனம், 7 உற்பத்தி நிலையங்கள் மற்றும் 21 விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் ரூ.134 கோடியே 8 லட்சம் மதிப்பிலான கலை பொருட்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆண்டுக்கு ஆண்டு அதன் விற்பனை அதிகரித்து, கடந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் ரூ.48 கோடியே 34 லட்சம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதில், ரூ.3 கோடியே 91 லட்சம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பூம்புகார் விற்பனை நிலையங்களில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து அழகிய கலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோன்று, நம்முடைய கலைஞர்களும் இளைஞர்களை கவரும் வகையில், புதிய வடிவங்களில் அழகிய கலை பொருட்களை தயாரித்து, வெளிமாநிலங்களில் விற்பனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரூ.134 கோடியில் கலை பொருட்கள் விற்பனை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: