மதுரை: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து, 48 கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்ட மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி, மற்றும் அதன் அருகேயுள்ள நாயக்கர்பட்டி, மீனாட்சிபுரம் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு, வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காது என உறுதிபட தெரிவித்துள்ளது. இந்நிலையில், அழகர்கோவிலில் மேலநாட்டு கிராம கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், அ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, தெற்குத்தெரு, கல்லம்பட்டி, மாங்குளம், நரசிங்கம்பட்டி உள்ளிட்ட 48 கிராமங்களைச் சேர்ந்த கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘‘டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு நமக்கு ஆதரவாக உள்ளது. இந்த திட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு கிலோ கனிமம் எடுக்க ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் சுற்று வட்டாரத்தில் உள்ள 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் இருக்காது. வேளாண்மை மட்டுமல்லாது, எந்த உயிரினங்களும் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்த திட்டத்தால் 100 கிராமங்கள் வரை வாழ்விடத்தை இழக்க வேண்டிவரும்.
நாளை (நவ. 28) அ.வல்லாளபட்டியில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு வழங்குவோம். வரும் 29ம் தேதி மேலூரில் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது’’ என அறிவிக்கப்பட்டது.
The post டங்ஸ்டன் சுரங்க திட்டம்; ஒன்றிய அரசை எதிர்த்து 48 கிராம மக்கள் போராட்டம்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.