சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் 29ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறும்பட்சத்தில், அதற்கு ”பெங்கல்” என்று சவுதி அரேபியா பெயர் வைக்கும்படி பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேதாரண்யத்தில் இருந்து 550 கிமீ தெற்கு -தென்கிழக்கு திசையிலும் சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.
இதனால், நேற்று முன்தினம் மாலையில் வேதாரண்யம் பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது. குளிர் அலைகள் ஆக்கிரமித்ததால், மழை தொடங்கியும் தீவிரம் அடையவில்லை. தொடர்ந்த தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல தமிழகம் நோக்கி நகரும். இலங்கை பகுதியில் பலத்த மழை பெய்யும். அந்த மழை நீரோட்டம் காரணமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு பெற்று பின்னர் புயல் சின்னமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நேற்று காலையில் இருந்து தமிழக கடலோரத்தில் மழை பெய்ய தொடங்கிவிட்டது. மாலையில் அதிகமானது. குறிப்பாக, நேற்றைய நிலவரப்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ததால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்தது. அத்துடன் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயல் சின்னமாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் இன்று பெய்யும். அதனால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். சென்னையில் நேற்று காலையில் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் 10 மணிக்கு மேல் நகரின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. மேலும், புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக் கூடும். பின்னர் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை நீடிக்கும். கனமழையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். 27ம் தேதி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருவள்ளூர் தொடங்கி புதுக்கோட்டை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
28ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் இதுவரை பதிவான மழையின் அளவு 328 மிமீ, இயல்பு 322 மிமீ பெய்ய வேண்டும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதி இலங்கை அருகே இருக்கிறது. கடலின் வெப்பநிலை 28 டிகிரி இருந்தால் அது சாதகமான நிலையாக இருக்கும். காற்று குவிதலும், விரிவடையும் பகுதிகள் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதால் இது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
காற்றின் வேகமும், திசையும் மாறும் போது, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை பிரிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் சிதறிப்போவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது. பெரும்பாலும் சாதகமான சூழ்நிலை நிலவுவதால் இது புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இது கரையை கடப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. எனவே இதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு சென்ைன வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை, செங்கை, காஞ்சி பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை மாவட்ட கலெக்டர்களும் பிறப்பித்துள்ளனர். ஏற்கனவே திருவள்ளூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழைப் பொழிவு விலக வாய்ப்பே இல்லை. புயல் சின்னம் கரையை நெருங்கும்போது அதீத மழை பெய்யும். வடக்கில் இருந்து 12 டிகிரி செல்சியசுடன் கூடிய குளிர் நீராவி தமிழகம் பகுதிக்கு வந்து, வெப்பம் அடையும்போது அளவுக்கு அதிகமான மழையை கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே மழைப் பொழிவு விலக வாய்ப்பே இல்லை, மேலும் மழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
The post வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயல் இன்று உருவாகிறது: தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் மிக கனமழை கொட்டும் appeared first on Dinakaran.