அதி கனமழை எச்சரிக்கை டெல்டா மாவட்டங்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக, நேற்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும், இன்று கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் கூடுதலாக மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முதல்வரின் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஜானி டாம் வர்கீஸ் (94999 56205, 88006 56753), மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கவிதா ராமு (90032 97303), திருவாரூர் மாவட்டத்திற்கு காயத்ரி கிருஷ்ணன் (73388 50002), கடலூர் மாவட்டத்திற்கு எஸ்.எ.ராமன் (94458 83226) ஆகிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன.

மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் மூலம், கனமழை எச்சரிக்கை வரப்பெற்ற மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறும், வெள்ள பாதிப்பு ஏற்படாத மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாய பெருமக்கள், பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்போர் கனமழை எச்சரிக்கைக்கு ஏற்றவாறு தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புகார்களை தெரிவிக்க மாநில அவசரகால செயல்பாட்டு மையம்:

* கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, வாட்ஸ்அப் 94458 69848

மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள்:
* நாகப்பட்டினம்- கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800-233-4233 வாட்ஸ் அப் 84386 69800

* மயிலாடுதுறை – கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04364-222588

* திருவாரூர்- கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் 94885 47941

* கடலூர் – கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் 94899 30520

TN Alert செயலி மூலமாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

The post அதி கனமழை எச்சரிக்கை டெல்டா மாவட்டங்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: