ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், இந்த ஆண்டு தொடக்கத்தில் நில மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க துறையால் தடுத்து வைக்கப்பட்டார். அதனால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தற்போது நடந்த தேர்தல் முடிவுகளின் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளார். இந்த மகத்தான வெற்றியின் சூத்திரதாரியாக ஹேமந்த் சோரன் உருவெடுத்துள்ளார். கடந்த ஜனவரி 31ம் தேதி ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட பின்னர், அவரது மறைந்த சகோதரர் துர்கா சோரனின் மனைவியும், அவரது மைத்துனர் சீதா சோரனும் பாஜகவில் இணைந்தனர். ஐந்து மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு, ஜூன் மாதம் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டது.
முன்னதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவன தலைவர் ஷிபு சோரனின் நெருங்கிய உதவியாளரும், கட்சியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தவருமான சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன் சிறைக்கு சென்ற பின்னர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வந்த பின் சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
அதன்பின் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அடுத்த ஒரு மாதத்திற்குப் பிறகு முதல்வர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் விரக்தியில் இருந்த சம்பாய் சோரன் திடீரென பாஜகவில் சேர்ந்தார். அதன்பின் சட்டப் பேரவை தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 56 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைதாகி சிறை சென்ற ஹேமந்த் சோரனான தன்னுடைய கணவரை மீண்டும் முதலமைச்சர் அரியணையில் அவரது மனைவி கல்பனா சோரன் ஏற்றி இருக்கிறார். இந்த தேர்தலில் கல்பனா சோரன் முக்கிய பங்காற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட 200 தேர்தல் பேரணிகளை நடத்தி, தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தார். கணவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசியலில் நுழைந்த கல்பனா, மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் ஹேமந்துடன் இணைந்து முக்கியப் பங்காற்றினார். இந்துத்துவா, ஊழல், ஊடுருவல் போன்ற பிரச்னைகளை வலியுறுத்தி பாஜக பிரசாரம் செய்தபோதிலும், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், ஹேமந்த் சோரனும், அவரது மனைவி கல்பனா சோரனும், பழங்குடியினரின் உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக கச்சிதமாக பயன்படுத்தி மக்களின் மனதை வென்றுள்ளனர். இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பாடமாக அமைந்து உள்ளது.
The post இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த மனைவி கல்பனா; பாஜகவின் இந்துத்துவா, ஊழல், ஊடுருவல் பிரசாரத்தை முறியடித்த ஹேமந்த் சோரன்: மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராகிறார் appeared first on Dinakaran.