திருவாதவூர் அருகே சிதைந்து கிடக்கும் தொன்மையான கண்ணாழ்வார் கோயில்: மரபு வாரம் துவங்கிய நிலையில் பாதுகாக்க கோரிக்கை


மதுரை: மதுரை மாவட்டம், திருவாதவூர் அருகே மருதூரில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ‘கண்ணாழ்வார் கோயில்’ உள்ளது. பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் கருவறை, நான்கு தூண்கள் கொண்ட முன்மண்டபம், பக்கவாட்டில் அம்மனுக்கான தனி கருவறை என முழுக்க கருங்கல்லிலான, இக்கோயில் பாண்டியர்கள் பாணிக்கே உரிய கட்டடக் கூறுகளுடன் கற்றளி கோயிலாக இருக்கிறது. பெண் தெய்வமிருந்த கருவறையில் 4 கரங்களுடன் கண்ணாழ்வார் சுகாசனத்தில் சங்கு சக்கரத்துடன் பீடத்தின் மீதுள்ளார். வயல்வெளியின் நடுவில் உள்ள இக்கோயிலின் கருவறை மேல் பகுதி முழுக்க இடிந்து விழுந்துள்ளது.

தூண்கள் மற்றும் கோயில் கட்டடத்தின் எஞ்சிய பாகங்கள் கோயில் வளாகம் முழுக்க விரவிக் கிடைக்கின்றன. தொன்மைக்குரிய இக்கோயில் பகுதியில் கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன. இப்பகுதியை ஆய்வு செய்த மதுரை சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் அறிவு செல்வம் ஆகியோர் கூறுகையில், ‘இங்குள்ள கல்வெட்டு, ‘கண்ணாழ்வார்‌ கோயில்’ என்றழைக்கப்‌பட்ட இக்கோயிலுக்குத்‌ திருகாராயண நல்லூர்‌ தேவதான இறையிலியாக அளிக்கப்பட்டதையும், ‘மலைக்குடி மலைமேல்கோல்‌’ என்ற நில அளவுகோல்‌ பற்றியும் தெரிவிக்கிறது.

திருமுற்றம், திருநந்தவனம், தீர்த்தக்குளம் ஆகியவை பனங்காடியான ராசேந்திரச் சோழச் சதுர்வேதி மங்கலத்து சபையாரிடமிருந்து பெற்று அனுபவித்து வரப்பெற்றது, கண்ணாழ்வார் என்று அழைக்கப்பட்ட இக் கோயில் இறைவர்க்கு திருப்படி மாற்றுள்ளிட்ட செலவினங்களுக்காக நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்கிறது. இந்த சிதைந்து வரும் பழமைப் பொக்கிஷம் சீரமைக்கப்பட வேண்டும். இங்குள்ள கல்வெட்டு பாகங்களையும் அழிவிலிருந்து காப்பாற்றிட வேண்டும்’ என்றனர். உலக மரபு வாரம் துவங்கியுள்ள நிலையில், சிறப்பு நடவடிக்கையாக இக்கோயிலுடன், இப்பகுதியின் கல்வெட்டுகள் உள்ளிட்ட தொன்மை அடையாளங்களையும் பாதுகாத்திட கோரிக்கை வலுத்துள்ளது.

The post திருவாதவூர் அருகே சிதைந்து கிடக்கும் தொன்மையான கண்ணாழ்வார் கோயில்: மரபு வாரம் துவங்கிய நிலையில் பாதுகாக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: