களக்காடு: திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். அதே நேரத்தில் தலையணையில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. களக்காடு பகுதியிலும் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன்காரணமாக களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தவாறு பேரிரைச்சலுடன் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 15ம் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நேற்று 4வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் தலையணையை சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் சாரல் மழையினால் வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றிலும் நீர்வரத்து அதிகரித்ததால் அங்குள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும், நம்பியாற்றில் குளிக்கவும் கடந்த 15ம் தேதி முதல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று வனச்சரகர் யோகேஸ்வரன் தெரிவித்தார்.
The post திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி: தலையணையில் குளிக்க தடை நீட்டிப்பு appeared first on Dinakaran.