புனே: அஜித் பவாருடன் இனி தொடர்பு ஏற்படுத்த மாட்டோம் என்று சரத் பவார் கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுத்தி, குடும்பத்தின் தொகுதியான பாராமதியிலும் குடும்ப உறுப்பினர்களை எதிர்த்து போட்டியிட வைத்த விவகாரம் தொடர்பாக சரத்பவார் கூறியதாவது: மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி சாதியை பயன்படுத்தி மக்கள் இடையே பிளவை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது கூறிவருகிறார்.
அஜித் பவாரும் அவருடைய ஆதரவாளர்களும் எங்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்று பா.ஜவுடன் கூட்டணி அமைத்துள்ளனர். பா.ஜவுடன் கூட்டணி வைத்திருப்பவர்களுடன் இனி ஒரு போதும் தொடர்பை ஏற்படுத்தமாட்டோம். எங்கள் கட்சியை சேர்ந்த சிலர் அஜித் பவார் அணியில் சேர்ந்தது கண்டிக்கத்தக்கது. இவர்களில் பலர் துரோகிகள் என்ற பட்டத்துடன் ஆளும் கூட்டணி வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். ஆனால் தேர்தலில் மக்கள் நல்ல முடிவை தருவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார். அதானி முன் பேச்சுவார்த்தையா? 5 ஆண்டுகளுக்கு முன்பு பாஜ – தேசியவாத காங்கிரஸ் உடனான முக்கிய பேச்சுவார்த்தையில் தொழிலதிபர் கவுதம் அதானி இருந்ததாக முன்பு கூறியிருந்த துணை முதல்வர் அஜித்பவார், தான் அப்படி கூறவில்லை என மறுத்துள்ளார்.
இதுகுறித்து அஜித்பவார் கூறுகையில், ‘அந்த கூட்டத்தில் கவுதம் அதானி பங்கேற்கவில்லை. நாங்கள் அதானியின் விருந்தினர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினோம் என்று தான் சொன்னேன். ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் தொழிலதிபர் கவுதம் அதானி ஏன் பங்கேற்க போகிறார்? தேர்தல் நேரத்தில் மிகவும் பிசியாக இருப்பதால் என்னையே அறியாமல் தவறுதலாக அவ்வாறு சொல்லிவிட்டேன்’ என்று விளக்கம் அளித்தார்.
The post அஜித் பவாருடன் இனி எந்த தொடர்பும் இல்லை: சரத்பவார் பேட்டி appeared first on Dinakaran.