கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின். பிரபல தொழிலதிபரான இவர், நாடு முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் அரசின் லாட்டரி சீட்டுகளை தொழிலதிபர் மார்ட்டின் அச்சடித்து விற்பனை செய்ததில் பல நூறு கோடி முறைகேடாக சம்பாதித்து நாடு முழுவதும் 40 நிறுவனங்களில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிக்கிம் அரசு புகாரின்படி லாட்டரி சீட்டு மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதேநேரம் கடந்த 2019ம் ஆண்டு தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.910 கோடி மதிப்புள்ள சொத்துகள் பல்ேவறு நிறுவனங்களில் முதலீடு செய்து இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். அதில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் 40 நிறுவனங்கள் மீது அசையா சொத்துகளில் முதலீடு செய்து இருந்தது உறுதியானது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதேநேரம் மீண்டும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அதில் கடந்த 2019 முதல் 2023ம் ஆண்டு காலகட்டத்தில் நாடு முழுவதும் தேசிய கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகளின் தேர்தல் பத்திரங்கள் வாங்கியது மூலம் ரூ.1300 கோடி வரை நன்கொடை வழங்கியது தொடர்பான ஆவணங்கள் சிக்கின.
எனவே இவ்வளவு தொகை நன்கொடை வழங்க எந்த வகையில் வருவாய் வந்தது என்பது குறித்து அமலாக்கத்துறை சார்பில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகனிடம் அமலாக்கத்துறை விளக்கம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் மருமகன் ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான 5 இடங்களில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர்.
குறிப்பாக, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தொழிலதிபர் மார்ட்டின் வீடு, ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் இரவு வரை சோதனை நடந்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தொழிலதிபர் மார்ட்டின் வீடு, ஓமியோபதி மருத்துவ கல்லூரி என கோவையில் மட்டும் 3 இடங்களில் சோதனை நடந்தது. அதேபோல் சிக்கிம் மாநிலத்தில் உள்ள மார்ட்டின் வீட்டுடன் கூடிய அலுவலகம், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மார்ட்டின் வீடு என மொத்தம் 7 இடங்களில் தனித்தனி குழுவாக 50க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சட்டவிரோதமாக 40 நிறுவனங்களில் ரூ.910 கோடி முதலீடு செய்தது மற்றும் தேர்தல் பத்திரம் வாங்கியது தொடர்பான முக்கிய ஆவணங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட பங்கு சந்தை விவரங்கள் அடங்கிய கோப்பு உள்ளிட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி கணக்காய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை முடிவில்தான் முதலீடு செய்த 40 நிறுவனங்கள் மூலம் எத்தனை கோடி லாபம் சம்பாதித்துள்ளனர். அந்த பணத்தை எந்தெந்த நிறுனங்களில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து முழுமையான தகவல்கள் வெளியே வரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநில லட்டரி விற்பனை மோசடி வழக்கில் தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் என மொத்தம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் ரூ.630 கோடி முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* சென்னை போயஸ் கார்டனில் உள்ள தொழிலதிபர் மார்ட்டின் வீடு, ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் இரவு வரை சோதனை நடந்தது.
* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தொழிலதிபர் மார்ட்டின் வீடு, ஓமியோபதி மருத்துவ கல்லூரி என கோவையில் மட்டும் 3 இடங்களில் சோதனை நடந்தது.
The post சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் லாட்டரி மார்ட்டின் வீட்டில் ஈடி சோதனை: விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் ரெய்டு; முக்கிய ஆவணங்கள் சிக்கின appeared first on Dinakaran.