அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறியதை நம்பி ஆன்லைன் வர்த்தகம் செய்த மருத்துவரிடம் ₹76 லட்சம் மோசடி: போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

சென்னை: அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறியதை நம்பி ஆன்லைன் வர்த்தகம் செய்த மருத்துவரிடம் ₹76 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக இருக்கும் ஒருவர் சமூக வலைத்தளத்தில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய பயிற்சி அளிக்கப்படும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று பதிவிட்டதை பார்த்துள்ளார். இதையடுத்து அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் குழுவில் மருத்துவரும் இணைந்துள்ளார். இன்ட்ரா டிரேடிங் நீண்டகால முதலீட்டுக்கான பயிற்சி என பல பாடங்களை திவாகர்சிங் என்பவர் வாட்ஸ்அப் குழுவினருக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

மருத்துவரும் அவர்கள் கூறியதை உண்மை என நம்பி, மோசடி கும்பல் சொன்ன இணைப்பின் மூலம் கணக்கை உருவாக்கி அதில் தனது வங்கிக் கணக்கை இணைத்து முதலீடு செய்துள்ளார். மருத்துவர் ₹76 லட்சம் வரை பணத்தை பல தவணைகளாக முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் இரண்டு, மூன்று வாரங்களுக்கு பணப்பரிமாற்றம் தடையின்றி நடந்துள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 22ம் தேதி மருத்துவர் ₹50 லட்சம் பணத்தை கணக்கில் இருந்து தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் நடந்த சம்பவம் குறித்து மருத்துவர் வாட்ஸ்அப்பில் கேள்வி எழுப்பியுள்ளார். வர்த்தக கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு அந்த மோசடி கும்பல் “வர்த்தக குழுவில் தகுதியான முதலீட்டு நபராக இருக்க வேண்டும் என்றால் தேவைப்படும்போதெல்லாம் பணம் எடுக்க வேண்டும் என்றால், குறைந்த பட்சம் ₹50 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும், அப்போதுதான் பணத்தை எடுக்கமுடியும்” என்று பதில் அளித்துள்ளனர். அப்போதுதான் மருத்துவர் இதுநாள் வரை தாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டுள்ளார்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து உடனடியாக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறியதை நம்பி ஆன்லைன் வர்த்தகம் செய்த மருத்துவரிடம் ₹76 லட்சம் மோசடி: போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: