சுசீந்திரம், நவ.6: சம்பக்குளத்தை பாதுகாத்து கால்வாயை தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் விட வலியுறுத்தி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் 59 பேரை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் மாநகராட்சி பூச்சிவிளாகம் பகுதியில் அமைந்துள்ளது சம்பக்குளம். பொதுமக்கள் குளிப்பதற்கும், நிலத்தடி நீரை பாதுகாத்திடவும் பயன்பட்டு வருகிறது. இந்த குளத்தில் இருந்து பிரிந்து செல்லும் கால்வாய் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் தர்மபுரம், மேலகிருஷ்ணன்புதூர், ஆத்திக்காட்டுவிளை, பள்ளம், புத்தளம், மணக்குடி ஆகிய ஊராட்சி பகுதிகளில் குடிநீர் ஆதாரத்தை பாதுகாத்து வந்தது. தற்போது இக்குளத்தில் ஆகாய தாமரைகள் நிறைந்துள்ளதால் தண்ணீர் முழுமையாக மாசுபட்டு துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. குளத்திற்கு தண்ணீர் வரும் வட்டக்கரை – அனந்தனாறு கால்வாயின் 6 வது மதகு இதுவரையிலும் திறக்கப்படாமல் உள்ளது.
குளத்திற்கு வரும் கால்வாய் பராமரிக்கப்படாமல் புதர்கள் நிறைந்துள்ளன. தற்போது மேல் உள்ள குளங்களில் இருந்து வரும் கழிவுநீர் மட்டுமே சம்பக்குளத்திற்கு வந்து சேருகிறது. ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 6 ஊராட்சி பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்தை பூர்த்தி செய்ய வேண்டி சம்பக்குளம் பராமரிப்பு இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பக்குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றி கடைமடை வரை தண்ணீர் விட வேண்டும் என்று வலியுறுத்தி மேலகிருஷ்ணன்புதூர் சாலை சந்திப்பில் மார்க்சிஸ்ட் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். மிக்கேல் நாயகி, கோபாலன், பபிதா, சொர்ணம்பிள்ளை, சசி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி பெல்லார்மின், சிவ கோபாலன், குமரேசன் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினர். மாவட்ட செயலாளர் செல்லச்சாமி போராட்டத்தை தொடக்கி வைத்தார். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் 59 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் உசிலன்விளை பகுதியில் உள்ள திருமணமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
The post சம்பக்குளத்தை பாதுகாக்க கோரி மார்க்சிஸ்ட் மறியல்: 59 பேர் கைது appeared first on Dinakaran.