நாகர்கோவில் அருகே அதிகாலையில் விபத்து; சென்டர் மீடியனில் மோதி நொறுங்கிய லாரி

ஆரல்வாய்மொழி: நாகர்கோவில் அருகே சென்டர் மீடியனில் மோதி லாரி நொறுங்கியது. இந்த விபத்தால் நாகர்கோவில் – திருநெல்வேலி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்துக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தேங்காய் லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் (49) என்பவர் டிரைவராக இருந்தார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த லாரி, நாகர்கோவில் அருகே உள்ள விசுவாசபுரம் பகுதியில் வந்தபோது, அந்த பகுதியில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டு இருந்த சென்டர் மீடியனில் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் லாரியின் முன் பகுதி சுக்குநூறாக உடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் கண்ணன் உயிர் தப்பினார். லாரி மோதிய சத்தம் கேட்டதும், அந்த வழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள், கடைகளில் இருந்தவர்களும் ஓடி வந்தனர். இந்த விபத்து நடந்த பகுதி, நாகர்கோவில் – திருநெல்வேலி நெடுஞ்சாலை ஆகும். சென்டர் மீடியனில் லாரி மோதி, சாலையின் நடுவில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகைக்காக வெளியூர்களுக்கு சென்றவர்கள் ஏராளமான கார்கள், பஸ்களில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து போனது. விபத்து குறித்து அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணிகளில் இருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். நேரம் செல்ல, செல்ல போக்குவரத்து நெருக்கடி அதிகரித்தால், நாகர்கோவில் நோக்கி வந்த வாகனங்கள் ஆரல்வாய்மொழியில் இருந்து மாற்று வழியாக சென்றன. பின்னர் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கிய லாரி உடனே அகற்றப்பட்டது. விபத்து நடந்த சமயத்தில் லாரிக்கு பின்னால் வேறு எந்த வாகனமும் வராததால், எந்த வித சேதமும் ஏற்பட வில்லை. லாரி டிரைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த சென்டர் மீடியனில் மற்றொரு லாரி மோதி, கான்கிரீட் கற்கள் நகர்ந்துள்ளன. அது சரி செய்யப்படாமல் இருந்துள்ளது. சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ள சாலை மிகவும் குறுகிய சாலை ஆகும். அங்கு வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் உள்ளது. அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. குறிப்பாக விசுவாசபுரம் – குமரன்புதூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த சென்டர் மீடியனை அகற்ற வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நாகர்கோவில் அருகே அதிகாலையில் விபத்து; சென்டர் மீடியனில் மோதி நொறுங்கிய லாரி appeared first on Dinakaran.

Related Stories: