இதில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இருவர் இடையே கடும் போட்டி நிலவுவதால், உச்சகட்ட இழுபறி இருக்கும் மாகாணங்களில் கமலா, டிரம்ப் இருவரும் இறுதிகட்ட பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தெற்காசிய ஆன்லைன் இதழில் கமலா ஹாரிஸ் எழுதிய சிறப்பு கட்டுரையில் கூறியிருப்பதாவது:
எனது தாயார் ஹியாமளா ஹாரிஸ், 19 வயதில் தன்னந்தனியாக இந்தியாவிலிருந்து கடல் கடந்து அமெரிக்காவுக்கு வந்தார். அவருக்கு 2 இலக்குகள் மட்டுமே இருந்தன. ஒன்று, என்னையும், என் சகோதரி மாயாவையும் வளர்ப்பது, மற்றொன்று அவரது மார்பக புற்றுநோயை குணமாக்குவது. எங்களின் பாரம்பரியத்தை போற்றவும், கவுரவிக்கவும் மதிப்பவர்களாகத்தான் என்னையும், என் சகோதரியையும் என் தாய் வளர்த்தார்.
ஒவ்வொரு வருடமும், நாங்கள் தீபாவளிக்கு இந்தியா செல்வோம். தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் சித்திகளுடன் நேரத்தை செலவிடுவோம். எனவே, துணை அதிபராக, எனது அதிகாரப்பூர்வ துணை அதிபர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டங்களை நடத்துவது எனக்கு பெருமை தருகிறது. சிறு வயதில், நாங்கள் இந்தியாவுக்குச் செல்லும்போது, என் தாத்தா பி.வி. கோபாலனை சந்திப்போம். அப்போது, சென்னையானது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. எனது தாத்தா ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
பெசன்ட்நகர் கடற்கரையில் காலையில் வாக்கிங் செல்வது அவரது வழக்கம். அவருடன் நானும் செல்வேன். அப்படி செல்லும் போது, எனது தாத்தா ஓய்வு பெற்ற தனது நண்பர்களுடன் ஜனநாயகம் மற்றும் சிவில் உரிமைகளுக்காகப் போராடுவதன் முக்கியத்துவம் பற்றி பேசுவதை கேட்பேன். எனது தாத்தா எனக்கு ஜனநாயகத்தை மட்டுமல்ல, ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார். அன்று அவர் சொல்லிக் கொடுத்த பாடங்கள்தான், பொதுச் சேவையில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டியது. இன்றும் துணை அதிபராக, அதிபர் வேட்பாளராக என்னை அவை வழிநடத்துகின்றன.
அமெரிக்க மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அனைத்து அமெரிக்க மக்களின் அதிபராக இருப்பேன். தெற்காசிய மக்களின் நலன்களை காப்பேன். எங்கள் எல்லையைப் பாதுகாப்பதிலும், முறையான, மனிதாபிமான குடியேற்றங்களை அனுமதிப்பதிலும் உறுதி கொண்டுள்ளேன். கண்டிப்பான சட்டங்கள் மூலம் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பேன். துணை அதிபராக, இந்தியா உட்பட முக்கிய தெற்காசிய நாடுகளுடன் எங்களது உறவுகளை விரிவுபடுத்தியுள்ளேன். அதை தொடருவேன்.
டிரம்ப் ஒரு சீரியசில்லாத மனிதர். ஆனால் அவர் மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தால் விளைவுகள் கொடூரமாக இருக்கும். டிரம்ப்பும் அவரது கூட்டாளிகளும் சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீட்டை ஒழித்துக்கட்டுவார்கள். அவரது பொருளாதாரக் கொள்கைகள் பணவீக்கத்தை அதிகரித்து, 2025 நடுப்பகுதியிலேயே பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும்.
தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களுக்கு 20 சதவீத வரியை விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். எனவே இது ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 4000 டாலர் செலவை அதிகரிக்கும். இவ்வாறு கமலா ஹாரிஸ் கூறி உள்ளார். இதுவரை நேரடியாகவும், தபால் மூலமாகவும் சுமார் 6.8 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்து விட்டனர்.
* கமலாவை அதிபராக்கி வரலாறு படைப்பார்கள்
ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இந்திய வம்சாளி நீல் மகிஜா, மாண்டிகோமெரி கவுன்டி ஆணையராகவும், தேர்தல் வாரிய தலைவராகவும் உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘கமலா ஹாரிசை நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுத்து அமெரிக்க மக்கள் வரலாறு படைக்க தயாராக உள்ளனர்.
டிரம்ப் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். 8 கோடி மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் டிரம்ப் தனது தோல்வியையும் ஒப்புக் கொள்ளாமல், தேர்தலை சீர்குலைக்க முயன்றார், புதிய அதிபர் பதவியேற்பை தடுக்க வன்முறையை தூண்டினார். அவர் மிகவும் ஆபத்தானவர். 2வது முறையாக அவர் அதிபரானால் மேலும் ஆபத்தானவராக இருப்பார்’’ என்றார்.
* அமெரிக்காவின் விடுதலை நாள்
வட கரோலினாவில் நேற்று பிரசாரம் செய்த டிரம்ப் பேசுகையில், ‘‘அமெரிக்கா இப்போது ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட நாடாக உள்ளது. வெளிநாட்டவர்கள் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால் விரைவில் இது ஆக்கிரமிக்கப்பட்ட நாடாக இருக்காது. நவம்பர் 5ம் தேதி, அமெரிக்காவின் விடுதலை நாள். நாங்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அமெரிக்கர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். சட்டவிரோத குடியேற்றங்கள் அடியோடு நிறுத்தப்படும்’’ என்றார்.
The post பாரம்பரியத்தை போற்றுபவள் நான் அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களுக்கும் அதிபராக இருப்பேன்: கமலா ஹாரிஸ் இறுதிகட்ட பிரசாரம்; நாளை விறுவிறுப்பான அதிபர் தேர்தல் appeared first on Dinakaran.