குரோஸ்னி நகரில் கடும் பனி மூட்டம் இருந்ததால் இந்த விமானம், கஜகஸ்தானின் அக்தாவ் நகருக்கு திருப்பி விடப்பட்டது. அக்தாவ் விமான நிலையத்தை நெருங்கிய நிலையில், விமானம் பலமுறை வானில் வட்டமடித்தபடி இருந்தது.
அந்த சமயத்தில், விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக தரையிறங்க அனுமதி கோரி விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அனுப்பி உள்ளார். அதைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் விமானம் கட்டுபாட்டை இழந்து வானில் இருந்து மிக வேகமாக கீழே இறங்கி தரையில் மோதி வெடித்து சிதறியது. குண்டுவெடித்தது போன்ற பெரும் தீப்பிழம்புடன் கரும் புகை எழுந்தது.
மேலும், படுகாயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் உடனடியாக அழைத்து வரப்பட்டனர். இந்த விபத்தில் 38 பயணிகள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுவரை 4 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. விமானத்தின் ஒரு பகுதி முற்றிலும் எரிந்திருப்பதால் சடலங்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதோடு, பலியானவர்களின் எண்ணிக்கையும் உடனடியாக உறுதி செய்யப்படவில்லை. 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் இறந்து விட்டதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதற்கட்ட விசாரணையில், பறவை கூட்டத்தின் மீது விமானம் மோதி, அதனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என ரஷ்ய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறி உள்ளது. இதுதொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த கஜகஸ்தான், அஜர்பைஜான் நாடுகள் நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளன. இந்த விசாரணையில் அஜர்பைஜான் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கஜகஸ்தான் கூறி உள்ளது. விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது. விமானத்தில், அஜர்பைஜானை சேர்ந்த 37 பேர், ரஷ்யாவை சேர்ந்த 16 பேர், கஜகஸ்தானை சேர்ந்த 6 பேர், கிர்கிஸ்தானை சேர்ந்த 3 பேர் பயணித்ததாக விமான நிறுவனம் பயணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
* என்ன நடந்தது?
அஜர்பைஜானின் பாகுவில் இருந்து ரஷ்யாவின் குரோஸ்னி விமான நிலையம் வெறும் 550 கிமீ தொலைவில் உள்ளது. இதனால் விபத்துக்குள்ளான விமானத்தின் சராசரி பயண நேரம் 57 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், பனி காரணமாக விமானம், காஸ்பியன் கடல் தாண்டி எதிர்திசையில் உள்ள அண்டை நாடான கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையத்திற்கு தரையிறங்க சென்றுள்ளது. ஏன் கடல் தாண்டி அக்தாவ் நகருக்கு திரும்பி விடப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை. மொத்தம் 2 மணி நேரம் 33 நிமிடங்கள் பறந்துள்ளது. அங்கும் தரையிறங்க முடியாமல் சிறிது நேரம் வானில் வட்டமடித்த படி இருந்தது.
அந்த சமயத்தில் விமானம் சீராக பறக்காமல், அதன் உயரத்தில் ஏற்ற இறக்கங்கள் அதிகளவில் இருந்துள்ளது. இந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக, ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் சில விமான நிலையங்கள் மூடப்பட்டதன் காரணமாக, விமானம் அக்தாவ் நகருக்கு திருப்பி விடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, நீண்ட தூரம் பறந்ததால் எரிபொருள் இல்லாமல் விமானம் விழுந்து நொறுங்கியதா, பறவை மோதி பாதிக்கப்பட்டதா என்பது விசாரணையில்தான் தெரியவரும்.
The post அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா சென்ற விமானம் தரையில் மோதி 38 பேர் பலி: பறவை மோதியதால் கஜகஸ்தானில் அவசரமாக இறங்கும்போது விபரீதம்; 29 பேர் படுகாயங்களுடன் மீட்பு appeared first on Dinakaran.